சனி, 28 ஏப்ரல், 2018

ராகுல் உயிருக்கு ஆபத்து: விசாரணை தொடங்கியது!

ராகுல் உயிருக்கு ஆபத்து: விசாரணை  தொடங்கியது!மின்னம்பலம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 26ஆம் தேதி காலையில் டெல்லியிலிருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வந்தபோது, அவர் பயணம் செய்த தனி விமானத்தில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான கோளாறுகள் தேசிய அளவில் மெல்ல மெல்ல அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன.
ராகுல் காந்தியின் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றியும், அதனால் ராகுல் காந்தி தப்பிப் பிழைத்தது பற்றியும் விவாதிக்க இந்திய மீடியாக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 26ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு டெல்லியிலிருந்து (ஃபால்கான் 2000) தனி விமானம் மூலம் கர்நாடகா புறப்பட்டார். அந்த விமானத்தில் ராகுல் காந்தியோடு அவரது நெருங்கிய நண்பர் கௌஷல் வித்யார்த்தி, ராம் ப்ரீத், ராகுல் ரவி, ராகுல் காந்தியின் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரி ராகுல் கௌதம் ஆகியோர் பயணம் செய்தனர்.
விமானம் வானில் பறந்துகொண்டிருந்த நிலையில் அன்று காலை 10.45 மணியளவில் அந்த விமானம் திடீரென இடது பக்கம் அசாதாரணமாகச் சாய்ந்தது. விமானத்தின் உயரம் செங்குத்தாகக் குறைந்தது.
மேலும் விமானத்துக்குள் கடுமையான இரைச்சல் கேட்டது. வானிலை மிகத் தெளிவாகவும், சூரிய ஒளி பிரகாசமாகவும் இருந்த நிலையில் விமானத்தின் இந்த நிலைமைக்கு வானிலை காரணமில்லை.
தவிர ராகுல் பயணித்த விமானத்தில் ஆட்டோ பைலட் எனப்படும், அதாவது விமானியின் பணிகளை தானாகவே செய்யும் ஆட்டோ பைலட் என்ற பொறிமுறையும் செயலற்றுப் போயிருக்கிறது. இந்நிலையில் விமானத்துக்குள் இருந்த ராகுல் காந்தி உள்ளிட்ட பயணிகள் உயிர் பயத்தில் அதிர்ந்தனர்.

விமானத்தை ஹூப்ளியில் தரையிறக்க விமானி மூன்று முறை முயற்சி செய்த நிலையில் மூன்றாவது முறைதான் மிகவும் கஷ்டப்பட்டு தரையிறக்க முடிந்தது. அப்போது விமானம் மிகவும் குலுங்கிக் குலுங்கி பயங்கர சத்தத்தோடுதான் தரையிறங்கியிருக்கிறது. இத்தனை அசாதாரண சூழலைக் கடந்து ராகுல் காந்தி பயணம் செய்த விமானம் காலை 11.25-க்குத் தரையிறங்கியுள்ளது.
மேற்கண்டத் தகவல்கள் எல்லாம் ராகுல் காந்தியின் நண்பரும் அவ்விமானத்தில் பயணித்தவருமான கௌஷல் வித்யார்த்தி, 26ஆம் தேதி மாலை கர்நாடக டி.ஜி.பி.யிடம் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கௌஷல் வித்யார்த்தி கர்நாடக டிஜிபியான திருமதி நீலமணியிடம் அளித்த புகாரில், “ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் நடந்த நிகழ்வுகள் அதில் பயணம் செய்த அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கின்றன. விமானத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு வானிலை காரணமில்லை என்ற நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டியதாக இருக்கிறது. எனவே இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று கோரியிருக்கிறது.
பிரதமர் மோடி ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்திருக்கிறார்.
ராகுலின் நண்பர் கௌஷல் வித்யார்த்தியின் புகார்களுக்கு நடவடிக்கையாக விமானத் துறை கட்டுப்பாட்டு இயக்ககம் நேற்று (ஏப்ரல் 27) இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது. மேலும் ஹூப்ளி போலீஸாரும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தலா என்ற ரீதியிலும், அந்த தனி விமானத்தை யார் சான்றளித்துப் பயணத்துக்கு அனுமதித்தார்கள் என்பது குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: