புதன், 25 ஏப்ரல், 2018

ஹெச்.ராஜா மீது 55 வழக்குகள்!

ஹெச்.ராஜா மீது 55 வழக்குகள்!மின்னம்பலம் :தொடர்ந்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்துவரும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் தனித்தனியாக 55 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து அவதூறாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் கருத்துகளைக் கூறி வரும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.கருணாநிதி குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு எதிராகவும் அவதூறான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராகப் பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து, ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது காவிரி விவகாரத்தைத் திசை திருப்ப நடக்கும் முயற்சி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்துவரும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது நேற்று (ஏப்ரல் 24) கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 55 வழக்குகள் தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திமுக செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜே.செல்வநாயகம் தலைமையிலான 55 வழக்கறிஞர்கள் ஹெச்.ராஜா மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஹெச்.ராஜா சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்குகளின் விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் வரவுள்ளது.

கருத்துகள் இல்லை: