புதன், 25 ஏப்ரல், 2018

கஸ்தூரிக்கு இன்று சீக்கிரம் வீடுதிரும்ப முடியவில்லை ....... மனுஷ்ய புத்திரன்

அழகுசாதனங்கள் விற்கும் கடையில்
விற்பனைப் பெண்ணாக பணிபுரியும்
என் பால்ய கால தோழி கஸ்தூரிக்கு
இன்று நேரத்தோடு வீடு திரும்பமுடியவில்லை
அவள் கடைசி வாடிக்கையாளருக்கு
அழகுக் குறிப்புகளை சொல்லி
விலையுயர்ந்த க்ரீம் ஒன்றை
விற்றபிறகு
சாலையில் இறங்கியபோதுதான்
கஸ்தூரிக்குத் தெரிந்தது
சாலையில் பேருந்துகள் ஓடவில்லை என்பது
ஆட்டோகள் ஓடவில்லை
டாக்ஸிகள் ஓடவில்லை
ஏன் மாட்டு வண்டிகளோ
குதிரை வண்டிகளோ ஓடவில்லை
திகைப்புடன்
பதட்டத்தை தணிக்க
ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்பினாள் கஸ்தூரி
ஐஸ் க்ரீம் கடை அடைக்கப்பபட்டுக்கொண்டிருந்தது
காஃபிக்கடைகள்
மதுபானக் கடைகள்

சாப்பாட்டுக்கடைகள்
மலர்களை விற்கும் கடைகள்
எல்லாமே அவசர அவசரமாக மூடப்பட்டுக்கொண்டிருந்தன
யாரோ எதற்கோ நியாயம் கேட்டு
தெருவில் பதாகைகளுடன்
ஊர்வலம் போய்கொண்டிருந்தார்கள்
கஸ்தூரிக்கு சீக்கிரம் வீட்டுக்குப் போகவேண்டியிருந்தது
அன்று அவள் வழக்கமாக பார்க்கும் சீரியலில்
முக்கியமான ஒரு திருப்பத்தை
எதிர்நோக்கியிருந்தாள்
அன்று அவள் குழந்தைகளுக்கான
வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டியிருந்தது
அன்று காலையில் மீந்துவிட்ட இட்லிகளை
உதிர்த்து உப்புமாவாக மாற்ற வேண்டியிருந்தது
அன்று காலையில் துவைத்துப்போட்ட துணிகளை
கொடியிலிருந்து மடித்துவைக்க வேண்டியிருந்தது
வீட்டிற்குபோய் செய்ய
கஸ்தூரிக்கு இன்னும்
ஆயிரம் காரியங்கள் இருந்தன
ஊர்வலம் போகிறவர்கள்
சாலை தடுபரண்களை தள்ளிக்கொண்டு
முழங்கியபடி செல்கிறார்கள்
ஒரு சிறு பெண் நெஞ்சை உயர்த்தி
' சுடுடா பார்க்கலாம்' என்று கத்துகிறாள்
கஸ்தூரிக்கு சீக்கிரம்
வீட்டுக்கு போகவேண்டியிருந்தது
அவளுக்கு எரிச்சலாக இருந்தது
அவளது ரத்தக் கொதிப்பு
நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது
கோபத்தில் உதட்டை கடித்தாள்
அவளது லிப்ஸ்டிக் கலைவதைக் உணர்ந்து
அவசரமாக அதை ஒற்றிக்கொண்டாள்
உரிமை உரிமை
என்று கத்திக்கொண்டு போகிறவர்கள்
எங்காவது ஒரு மயானத்திலோ
அரவமற்ற பொட்டலிலோ போய் ஏன் கத்தக்கூடாது
என்று தார்மீக உணர்ச்சியுடன் சிந்திக்கத் தொடங்கினாள் கஸ்தூரி
பேருந்துகள் ஓடாவிட்டால் உரிமை வந்துவிடுமா
ஆட்டோகள் ஓடாவிட்டால் உரிமை வந்துவிடுமா
டாக்ஸிகள் ஓடாவிட்டால் உரிமை வந்துவிடுமா
கடைகளை அடைத்துவிட்டால் உரிமை வந்துவிடுமா
என்றெல்லாம் கஸ்தூரியின்
குழந்தை மனம் சிந்திக்கத் தொடங்கியது
"மக்களுக்காக போராடுகிறவர்கள்
மக்களுக்கு எந்த தொந்ததவும் இல்லாமல் போராட் வேண்டும்
நீதிக்காக போராடுகிறவர்கள்
நீதிக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் போராட் வேண்டும்"
இப்படி ஒருவாக்கியம்
மனதில் தோன்றியதும்
கஸ்தூரிக்கு மனம் கிளர்ந்துவிட்டது.
வேகமாக நான்காவது தளத்தில் இருக்கும்
மொட்டை மாடிக்கு ஓடினாள்
இந்த உலகத்தை
தனது நற்செய்தியால்
பாலிக்க வேண்டும் என்று விரும்பினாள்
ஒரு மலைப்பிரசங்கம் ஒன்றை நிகழ்த்த விரும்பினாள்.
நல்வழிப்படுத்தும் கிறிஸ்துகள்
நமது காலத்தில்
எந்தக்கொட்டிலில்
எப்போது பிறப்பார்கள் என்று
யார்தான் சொல்ல முடியும்
கஸ்தூரி உரத்த குரலில் போதிக்கிறாள்
கண்ணில் தூசு விழாமல்
எப்படி போராட வேண்டும் என்று
தெருவில் புழுதி பறக்காமல்
எப்படி போராடுவது என்று
கறுப்புக்கொடிகளை உயர்த்திப்பிடிக்காமல்
அவற்றை உள்ளாடைகளாக தைத்து
மறைவாய் அணிந்துகொள்ளலாம் என்று
அன்றாட வாழ்கை என்பது
ஒரு ரோபோவில் எழுதப்பட்ட
ப்ரோக்ராம் என்றும்
அது சீர் குலைந்தால்
ஒட்டுமொத்த ஒழுங்கும்
அழிந்துவிடும் என்றும்
கஸ்தூரி நம்பினாள்
எந்தபோராட்டமும் நடக்காவிட்டாலும்
ஒரு தனிமனிதனின் வாழ்க்கை
இந்த நகரத்தில் எந்த நேரத்திலுகம்
சிதறக்கூடும் என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை
கஸ்தூரிகளுக்கு தெரியாது
நாகரிகங்கள் எப்படி எழுந்தன என்று
பிரளயங்கள் எப்படி தோன்றின என்று
நகரங்கள் எப்படி அழிந்தன என்று
மணிமுடிகள் எப்படிச் சரிந்தன என்று
கஸ்தூரிகளுக்கு தெரியாது
கஸ்தூரிகளுக்குத் தெரியாது
தன் மொழிக்காக தன்னைத்தானே எரித்துக்கொண்டவர்களை
தூக்கு மேடையில் கம்யூனிஸ்ட் அறிக்கையுடன்
தொங்கியவர்களை
கஸ்தூரிகளுக்கு
கிரிக்கெட்டில் முதல் பந்துவீசப்படுவதற்குள்
மைதானத்திற்கு செல்லவேண்டும்
கஸ்தூரிகளுக்கு
தியேட்டரில் விளம்பரப்படங்கள் முடிவதற்குள்
தங்கள் இருக்கையில் அமர்ந்துவிடவேண்டும்
அதற்கு குறுக்கே வருகிறவர்கள்
உடனடியாக கலைக்கப்பட வேண்டும்
குப்பைகளைபோல அகற்றப்படவேண்டும் என்று கஸ்தூரிகள் விரும்புகிறார்கள்
இந்தக் காலம்
கஸ்தூரிகளால் ஆனது
இந்தக் காலம் சேகுவேராக்களை அல்ல
கஸ்தூரிகளையே உருவாக்குகிறது
இந்தக் காலத்தை நான் மனதார வெறுக்கிறேன்
அதன் எல்லையற்ற பாசாங்கை வெறுக்கிறேன்
அதன் எல்லையற்ற தன்னலத்தை வெறுக்கிறேன்.
25.4.2018
இரவு 12.42
மனுஷ்ய புத்திரன்
( இந்தக் கவிதை யாரையும் குறிப்பிடுவது அல்ல)

கருத்துகள் இல்லை: