ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

ஸ்டாலின் :ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா .. நிறைவேற்றுவோம் .

மின்னம்பலம்:  திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக லோக் ஆயுக்தா
சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பெரம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் இன்று (ஏப்ரல் 22)நடைபெற்ற திமுக பிரமுகர் புல்லட் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சட்டமன்றத்தில் பலமுறை எடுத்துரைத்தும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தத் தமிழக அரசு முன்வரவில்லை. அவர்கள் இதுகுறித்து எந்தப் பதிலும் கூறவில்லை. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சிக்கு வரவுள்ளது, அதில் எள்ளளவும் மாற்றமில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார்.

"மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் அமைச்சர்கள் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தற்போது இருக்கக் கூடிய 90சதவிகித அமைச்சர்கள் வெளியில் இருக்க மாட்டார்கள், சிறையில்தான் இருப்பார்கள். தமிழகத்தைப் பற்றியும் தமிழக மக்களைப் பற்றியும் கவலைப்படாத ஒரு அரசு மத்தியில் உள்ளது. மத்திய அரசுக்குத் துதிபாடும் அரசாக மாநில அரசு உள்ளது" என்றும் தெரிவித்தார்.
முன்னதாக லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படாதது தொடர்பான வழக்கின் விசாரணையில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகளைத் தமிழக அரசு உடனடியாகத் துவங்க வேண்டும் என்று கடந்த 19ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் இதுகுறித்து அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பது குறித்து வரும் ஜூன் 9ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: