செவ்வாய், 24 ஏப்ரல், 2018

மருத்துவ மேற்படிப்பு: 50 சதவிகித இடஒதுக்கீடு நிறுத்தம் .. கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு

மின்னம்பலம் :கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் பயில 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 24) உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் மருத்துவ மேற்படிப்புக்கான கல்வியில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளால் இந்த இடஒதுக்கீடு ரத்தாகியிருந்தது.
இது அரசு மருத்துவர்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் ஏழை மக்களுக்கும் எதிரானது என்று அரசு மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
மேலும், முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு விழுக்காட்டைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடமே வழங்கிடும் வகையில், இந்திய மருத்துவக் கழகத்தின் (MCI) விதிமுறைகளில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்திவந்தனர்.

நீட் தேர்வு அமலாக்கப்பட்ட பின்னரும் மருத்துவ உயர் மேற்படிப்புகளான (MD, MS) ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு , கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு பயில, 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நடப்பாண்டு மட்டும் இடைக்கால நிவாரணமாக, 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்தபோது, "அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுபோல், எம்.டி, எம்.எஸ். ஆகிய மருத்துவ மேற்படிப்புகளில் சேர இடைக்கால நிவாரணமாக 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியாது. மேலும் மருத்துவ மேற்படிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து, முழுமையாக விசாரித்து முடிக்கும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் கிராமப்புற மாணவர்கள், பின்தங்கிய வகுப்புகளை சோ்ந்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே மருத்துவக் கல்வி பயின்றுவருபவர்களும் மருத்துவ மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் உருவாகியுள்ளது.
இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் கிராமப்புறங்களில் மலைகளின் மேல் மிகவும் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு பணியாற்ற மருத்துவர்கள் செல்ல மாட்டார்கள் . இதன் விளைவாக கிராமப்புற மக்களின் ஆரோக்கியம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
மருத்துவத் துறைகளில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமே இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டதற்கும் இந்தப் பின்னணிதான் காரணம் என்று மருத்துவத் துறையிலுள்ள நிபுணர்களும் மூத்த மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: