வியாழன், 26 ஏப்ரல், 2018

குட்கா ஊழல் சி பி ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு .... குட்கா கடந்து வந்த பாதை ... கதைசுருக்கம்

ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர்,
tamilthehindu :முத்தலீஃப் சென்னை தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா பான் மசாலாவுக்கு தடை< கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தது. இதையடுத்து இந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்தது. தமிழக அரசும் 2013-ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதித்தது. இந்த உத்தரவு பின்னர் 2015-ம் ஆண்டு அறிவிப்பாணையாக அரசிதழில் வெளியிட்டது.
2013-ம் ஆண்டு முதல்வர் சட்டப்பேரவையில் குட்கா பொருட்களுக்கு தடை விதித்து அறிவித்தும் பான், குட்கா தயாரிப்பு, விற்பனை படு ஜோராக நடந்து வந்தது. புழல் பகுதியில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது நடந்து வந்தது.
சிபிஐக்கு புகார்
இதற்காக அனைத்து மட்டத்திலும் மாமூல் அளிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு தெரியவந்தது. அரசு தடை செய்தும் ஜோராக நடக்கும் விற்பனை குறித்து 2014-ம் ஆண்டில் சென்னை சிபிஐக்கு சிலர் புகார் கடிதம் அனுப்பினர்.

சென்னை, மாதவரத்தில் இயங்கி வரும் ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், அந்த வரி ஏய்ப்பை மத்திய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அந்தப் புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
புகாரைப் பெற்ற சிபிஐ இதற்காக தனியாக விசாரணை நடத்த அதிகாரிகளை நியமித்தது. விசாரணை 2015 மார்ச் மாதத்தில் முடிந்தது. சிபிஐ விசாரணையில், சென்னை மாதவரத்தில் சட்டவிரோத குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருவது உறுதியானது.
காவல்துறைக்கு சிபிஐ கடிதம்
குட்கா தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளாக இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக காவல்துறை என்பதால் புகார் மனு மற்றும் விசாரணை அறிக்கையை தமிழக காவல்துறைக்கு அனுப்பலாம் என்று சிபிஐ முடிவெடுத்து, புகார் மனுவும், விசாரணை அறிக்கையும் அப்போதைய சென்னை காவல் ஆணையாளர் ஜார்ஜுக்கு அனுப்பப்பட்டது.
போலீஸ் சோதனை
கடிதத்தைப் பெற்ற காவல் ஆணையர் ஜார்ஜ் இது குறித்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட, பூர்வாங்க விசாரணை செய்த எஸ்.பி.ஜெயக்குமார், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மாதவரம் குட்கா கிடங்கில் சோதனை நடத்தினார். சோதனையில், மூட்டை மூட்டையாக மாவா, குட்கா கைப்பற்றப்பட்டது.
சோதனை நடந்த மறுநாள் மாதவரம் துணை ஆணையர் விமலா தலைமையிலான காவல்துறையினர், மாதவரம் கிடங்குக்கு சீல் வைத்தனர். போலீஸார் கைப்பற்றப்பட்ட பொருட்களிலிருந்து மாதிரியை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி வைத்தனர். சம்பத் என்ற ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக இருந்தார்.
கிணற்றில் போட்ட கல்
அதன் பின்னர் இந்த விவகாரம் முற்றிலும் கிடப்பில் போடப்பட்டது. அந்த நேரத்தில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உரிய தொகை அளிக்கப்பட்டதாக பின்னர் குற்றம் சாட்டப்பட்டது. அதை நிரூபிக்கும் வண்ணம் குட்கா விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது.
வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில் குட்கா கம்பெனி 250 ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்காக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து 2016-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனை, சென்னை, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. மாதவரம் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கியமான ஒரு டைரி சிக்கியது. இந்த சோதனையில் கிடைத்த ஒரு டைரிதான் இன்று மிகப்பெரிய திருப்பு முனையாக அனைவரின் தலைக்கு மேலும் கத்தியாக தொங்குகிறது.
தலைமைச் செயலாளருக்கு ஐடி கடிதம்
அந்த டைரியில் அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்த ஆதாரங்களை வைத்து சென்னை வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் பாலகிருஷ்ணன் தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவுக்கு 2016 ஆகஸ்ட் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் டைரி சிக்கிய விபரத்தைக் குறிப்பிட்டு, மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும் ஆதாரத்தை அளித்த ஐடி
தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ், நடவடிக்கை எடுக்க ஏதுவாக மேலும் ஆதாரங்களைக் கேட்க, மீண்டும் வருமான வரித்துறை கூடுதல் ஆதாரங்களை அளித்தது. ஆனால் அதன் பின்னரும் இந்த விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதா டிச.5 அன்று மரணமடந்தார்.
தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை
அதன் பின்னர் 15 நாட்கள் கழித்து டிச.21 அன்று தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
ஜார்ஜ் எழுதிய கடிதம்
சோதனை நடந்த மறுநாள் டிச.22 அன்று குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு உள்துறைச் செயலாளருக்கு காவல் ஆணையர் ஜார்ஜ் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபக்கம் ஜார்ஜுக்கு தொடர்பு உள்ளது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட, மறுபுறம் ஜார்ஜே தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக இயலாமையுடன் கடிதம் எழுதியதும் ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது.
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்ட வழக்கு
ஜார்ஜ் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசு, குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகராமல் தேங்கி நின்றது. இந்நிலையில் இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் பெரிதாக கிளப்பப்பட்டது.
களத்தில் இறங்கிய திமுக
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி விசாரணை முறையாக நடப்பதாகப் பதிலளித்தார். இதனால் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் குட்கா போதை வஸ்துகளை எப்படி கொண்டு வரலாம் என ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
நீதிமன்றம் சென்ற கதை
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த ஜனவரி 17-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்தார்.
ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், ''கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தது. இதனையடுத்து இந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்தது. இதனை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் 2013-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.
எம்.டி.எம் (MDM) பான் மசாலா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அந்நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்களைப் கைப்பற்றியதாற்கான ஆதாரங்கள் அந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே முறையான விசாரணை நடக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு விசாரித்தது.
கலால் துறை மனு
வழக்கு விசாரணையின் போது, மத்திய கலால் வரித் துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஹாவாலா முறையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு இதுவரை 55 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வருகிறது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
வருமான வரித்துறை தாக்கல் செய்த மனு
வருமான வரித்துறை புலனாய்வு பிரிவின் முதன்மை இயக்குநர் சுசிபாபு வர்கீஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியதாவது:
“மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள செங்குன்றம் குட்கா குடோவுனில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி அன்று நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்தில் குட்கா விற்பனைக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் சிக்கின.
எனவே, இந்த குட்கா ஊழலில் தொடர்புள்ள நபர்களின் பட்டியலை தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த கடந்த 2016 ஆகஸ்டு 11-ம் தேதி அன்று அப்போதைய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு தனித்தனியாக ரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக மாதவராவ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலா அறையில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய டிஜிபி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பிய ரகசியக் கடிதம், வி.கே.சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது.
குட்காவை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய பலருக்கும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததை ‘ஹெச்.எம்’ என மாதவராவ் தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுபோல குட்கா சோதனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினரிடமும் ஒப்படைத்துள்ளோம்.”
இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் வாதம்
இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “மனுதாரர் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மத்திய அரசு அதிகாரிகால் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை.
குட்கா விவகாரத்தில் மாநில அரசு அதிகாரிகள் பெரும்பான்மையான நபர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். குறைந்த மனித சக்தியை வைத்து சி பி ஐ இந்த வழக்கை விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால் இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கலாம். விசாரணை தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்கிறோம் இதே போல் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை கண்காணித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையர் தரப்பில் தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தன்னுடைய வாதத்தில் “மாநில போலீஸ் இந்த வழக்கை விசாரிக்கவில்லை. இது சம்பந்தமான விசாரணை குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபிக்கு அறிக்கை அளிக்கவில்லை.
ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் கீழ் தான் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. எனவே சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி 25-ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஜனவரி 30-ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை: