வியாழன், 26 ஏப்ரல், 2018

இந்து - இஸ்லாம் - கிறித்துவ மதங்களின் வன்முறைகள் .. தோழர் பாரூக் நினைவேந்தல்


கீற்று : இந்து - இஸ்லாம் - கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன; இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் - குருதிக் கொடை முகாம் - மத எதிர்ப்புக் கருத்தரங்கம் - நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். kolathoor mani viduthalai rajendran and pamaran
பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின் வன்முறைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். கடவுள் என்ற கற்பனையைவிட மதம் மிகவும் ஆபத்தானது என்று பெரியார் சுட்டிக்காட்டிய கருத்தை முன் வைத்து, பெரியாரின் இயக்கம் இந்து பார்ப்பனிய மதத்துக்கு எதிராக அதிகம் பேசினாலும் அனைத்து மதங்களையுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கி யிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.
1934ஆம் ஆண்டு பகுத்தறிவு ஏட்டில் பெரியார் மதம் குறித்து எழுதிய விரிவான கட்டுரையில், “நாம் மாத்தி ரமல்லாமல் நம்மைப்போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக் கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகிறார்ககள் என்பதும் நமக்குத் தெரியும். ஆதலால்தான் மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே மனித சமூகத்துக்கு ஒற்றுமையும் சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகின்றோம்” என்று எழுதியிருப்பதை எடுத்துக் காட்டினார்.
இந்து மதக் கொடுங்கோன்மை குறித்து தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, இஸ்லாமிய மத வன்முறை குறித்து குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தைச் சார்ந்த வழக்குரைஞர் அலாவுதீன், கிறிஸ்தவ மத வன்முறை குறித்து பேராசிரியர் அருள் அமலன் ஆகியோர் விரிவாக வரலாற்றுச் சான்றுகள் பைபிள் மற்றும் குர்ரானி லிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி உரையாற்றி னார்கள்.
தொடர்ந்து 7 மணியளவில் பாரூக் நினைவரங்க நிகழ்வு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. இந்திய பகுத்தறிவாளர் கூட்டுச் சங்கத்தின் புரவலர் யு. கலாநாதன், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், சமூக செயல்பாட்டாளர் ரோசி மது, தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர் பிரபாகரன், எழுத்தாளர் பீர் முகம்மது, வழக்குரைஞர் கலையரசன், பி.யு.சி.எஸ். அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலமுருகன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்.
பாரூக் முகநூலில் கடவுள், மதம் குறித்து விவாதித்தார் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மதவெறியின் கொடூரத்தைக் காட்டுகிறது என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் இஸ்லாமிய தலைவர்கள் எவரும் பாரூக்கை கொலை செய்தவர்களை வெளிப் படையாகக் கண்டிக்க முன்வராததையும் சுட்டிக் காட்டினார். இனி திராவிடர் விடுதலைக் கழக மேடைகளில் எல்லா மதங்களின் பிற்போக்குக் கருத்துகளையும் விவாதிப்போம் என்று அறிவித்தார். கோவை மாவட்ட கழகத் தலைவர் நேருதாஸ் நன்றி கூறினார். குருதிக் கொடை வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மலேசிய தலைநகர் கோலாம்பூரிலும், தமிழ் நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், பேராவூரணி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபாரூக் நினைவேந்தல் நிகழ்வு - படத்துக்கு மாலை அணிவித்தல் நடந்தன.

கருத்துகள் இல்லை: