சனி, 28 ஏப்ரல், 2018

காலை 7, சனி, 28 ஏப் 2018 ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு.. பயிர்கள் சேதம்

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு!
மின்னம்பலம்: : கதிராமங்கலம் அருகே மதகடி என்னும் இடத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து இன்று வரை அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் எனத் தமிழகம் முழுவதும் ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், கதிராமங்கலத்தில் உள்ள மதகடி என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் திடீரென நேற்று (ஏப்ரல் 27) மதியம் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பினை சரிசெய்ய ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் முகாமிட்டிருந்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அந்த உடைப்பு சரி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்தப் பகுதியில் தற்போதுதான் நெற்பயிர் நடவு நட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இந்த உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இருக்கும் வயலில் உள்ள பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
"விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் மூலம்தான் விவசாயம் செய்துவருகிறோம். தற்போது வயலில் நெற்பயிர் நட்டுள்ளோம். இந்த நேரத்தில் எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும்" என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: