செவ்வாய், 24 ஏப்ரல், 2018

கர்நாடகா தேர்தல் தொங்கு சட்டசபை? தேவகௌடாவின் மூன்றாவது அணியின் பங்களிப்பு ..

கிங்மேக்கர் தேவகவுடா: தேர்தல் கணிப்பில் தகவல்! மின்னம்பலம்: மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கருத்துக்கணிப்புகள் வெளியாகிவருகின்றன. இதே கருத்தைப் பிரதிபலித்துள்ளது சமீபத்தில் வெளியான டைம்ஸ் நவ் – விஎம் ஆர் தேர்தல் கணிப்பு.
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 17ஆம் தேதியன்று தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் முதலே காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தன. தற்போது, கர்நாடகாவில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த இரு வாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், கர்நாடகா முழுக்கப் பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்று சில நிறுவனங்கள் தங்களது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 91 இடங்கள், பாஜகவுக்கு 89 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைக்குமென்று இந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 4 இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி 38.6%, பாஜக 35.03%, ஜனதா தளம் கூட்டணி 21.33% வாக்குகள் பெறும் என்று டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக, லிங்காயத் தனி மதம் என கர்நாடகாவில் அறிவித்தார் முதலமைச்சர் சித்தராமையா. இவ்வாறு அறிவித்ததன் மூலமாக, காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தலில் பலன் கிடைக்கும் என்று 39.12% பேரும், அந்த முடிவினால் எந்த தாக்கமும் இருக்காது என்று 38.32% பேரும், எதுவும் சொல்ல முடியாது என்று 22.56% பேரும் இந்தக் கணிப்பில் பதில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பின் மூலமாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதைப் பொறுத்தே ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோர், இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளால் உற்சாகத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியை முடிவுசெய்யும் கிங்மேக்கர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியா டுடே – கார்வி கருத்துக்கணிப்பும் இதுபோன்ற முடிவையே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஏபிபி நியூஸ் – சிஎஸ்டிஎஸ் தேர்தல் கணிப்பில் தொங்கு சட்டமன்றம் அமையும் எனவும், பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி9 மற்றும் சி வோட்டர் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான சி-போர் கருத்துக்கணிப்பிலும், காங்கிரஸ் பெரும்பான்மை பெறும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: