புதன், 25 ஏப்ரல், 2018

பெண்ணாக இருந்தால் படுக்கையையும் ஆணாக இருந்தால் எடுபிடி வேலையையும் பார்ப்பது பி.எச்டி படிப்பில் கட்டாயமா???

Prabha - Oneindia Tamil  பாலியல் கூடங்களாகும் பல்கலைக்கழகங்கள் அந்த பி.எச்டி மாணவி!-
 சென்னை: 'மற்றவர் வாழ்க்கையை மேம்படச் செய்யவும் நமக்குக் கிடைத்ததைவிட மேம்பட்டதாக ஒரு சமூகத்தையும் உலகத்தையும் மாற்றிச்செல்வதுதான் கல்வி' - இது மேல்நாட்டு அறிஞர் மரியான் ரைட் ஈடல்மேனின் வார்த்தைகள். கற்றலின் மேன்மையையும் கற்பித்தலின் சிறப்பையும் ஒருசேர நினைவூட்டும் வரிகள் இவை. தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றும் பேராசிரியர்களில் பலர் இந்த வார்த்தைகளைக் கடந்து போனவர்கள்தான். அருப்புக் கோட்டையில் ஒரு பேராசிரியையின் செயலால், ஒட்டுமொத்த கல்வித்துறையே களங்கப்பட்டு நிற்கிறது. ' அவர் வெறும் அம்பு மட்டும்தான். எய்தவர்கள் யார்?' ; ' யாருக்காக இந்த ஈனச் செயலை அந்தப் பேராசிரியை செய்தார்?' என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புவதும் இந்த விவகாரத்தை இன்னும் வீரியமாக்கியிருக்கிறது. New series on TN varsities corruption Part 2 பேராசிரியையின் செல்போனில், சில மேலிடங்களின் எண்களும் சில மாணவிகளின் புகைப்படங்களும் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அருப்புக்கோட்டை பேராசிரியை செய்த காரியம் வெளியுலகின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், வெளியே வராமல் 'மேலிட'ங்களுக்காக கருமமே கண்ணாக வேலை பார்க்கும் பேராசிரியர்களும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். 
துணைவேந்தர் பதவிக்காகவும் அரசுக் கல்லூரி முதல்வர் பதவிக்காவும் சிலர், எந்த எல்லைக்கும் செல்கின்றனர். பல பேராசிரியர்களுக்கு பி.எச்டி, எம்.பில் படிப்புகள், தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கிவிடுகிறது. அந்தக் கைடு வேணாம் சார்..! ' சார்...அந்த கைடு எனக்கு வேண்டாம்...அவருடைய பேச்சே சரியில்லை. வீட்டு வேலைகளைச் செய்யச் சொன்னால்கூட பரவாயில்லை. வீட்டுக்குத் தனியா வான்னு கூப்பிட்டு நச்சரிக்கிறார். வீட்டுல சொன்னா படிக்க விட மாட்டாங்க' - கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் விசும்பல் இது.
ஆண் கைடாகவும் பெண் ஆய்வு மாணவியாகவும் இருக்கும்போது பல இடங்களில் இந்த அத்துமீறல் அரங்கேறுகிறது. இதையெல்லாம் களைவதற்காகப் புகார் பெட்டியையும் பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டு வந்து வைத்தார்கள். ஒருகட்டத்தில், இவ்வளவு புகார்களா...என அதிர்ச்சியடைய வைத்த சம்பவங்களும் ஏராளம். ஒருகட்டத்தில், புகாருக்கு ஆளான கைடை (பேராசிரியர்) மாற்றிவிட்டு, வேறு ஒருவரை பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குக் கைடாக நியமிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. 
New series on TN varsities corruption Part 2 இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்(சிண்டிகேட்) குழுவில் அனுமதி பெற்றாக வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு ஆதரவாக பெரும்பான்மை சிண்டிகேட் உறுப்பினர்கள் இருந்தால், மாணவிகளின் புகார்களுக்கு எந்தவித நியாயமும் கிடைப்பதில்லை. புதிதாக துணைவேந்தராக வருகிறவர்களை தங்கள் கைகளுக்குள் அடக்கிவிடும் ஆற்றல் படைத்த பேராசிரியர்கள் பலர் உள்ளனர். இவர்களுடைய 'தகுதிக்கேற்ப' ஏதாவது ஒரு துறையின் தலைவராக நியமிக்கப்படுவார். அந்தத் துறையின் ஆய்வுக்காக வழங்கப்படும் நிதிகளுக்கு முறையான கணக்குகளை எழுதுவதில்லை. 
கோவை பாரதியார் பல்கலைக் கழகம் அந்த வரிசையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் பேராசிரியர் ஒருவர் செயல்பட்டு வந்தார். அவரைப் பற்றிய விஷயங்கள், ' பழனிக்கே பஞ்சாமிர்தமா?' என்ற பாணியில் அமைந்தவை. சில சிண்டிகேட் உறுப்பினர்கள், 'ஆங்கிலத் துறைக்கே அவர் தகுதியற்றவர்' என விமர்சித்தது உண்டு. ஒருமுறை அவரிடம் கோபத்தில் பேசிய பேராசிரியர் ஒருவர், ' உங்களுக்குக் குயின்(Queen) என்ற வார்த்தையை ஒழுங்காக உச்சரிக்கத் தெரியுமா? அப்படி உச்சரித்தால் நான் வேலையை விட்டே போய்விடுகிறேன். நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்து காரியங்களும் எனக்குத் தெரியும். ஒருநாள் வகையாகச் சிக்கத்தான் போகிறீர்கள்' என எச்சரித்தார். 
 அந்த பேராசிரியருக்கு அவர் விட்ட சாபம், கொஞ்ச நாளில் நிறைவேறியது. ஆய்வுக்காக வந்த மாணவியிடம் வழியத் தொடங்கினார் அந்தப் பேராசிரியர். ஒருகட்டத்தில் அந்த மாணவியிடம் பேசியவர், ' எந்தவிதச் சிரமமும் இல்லாமல் பி.எச்டியை முடித்துத் தருகிறேன். எந்தக் கஷ்டமும் பட வேண்டாம். என்னுடைய மனைவிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிக எளிதாக பி.எச்டி வாங்கினேன். அங்கிருந்த துணைவேந்தர் எனக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். நான் நினைத்தால் ஆளுநர் மாளிகை வரையில் செல்வாக்கைக் காட்ட முடியும். 
படித்து முடித்த பிறகு இங்கேயே கௌரவ விரிவுரையாளராகவும் நீ பணியாற்ற முடியும். பெல்லோஷிப் உள்பட நீ நினைக்கும் எதுவும் சாத்தியமாகும். நான் நேரிடையாகக் கேட்பதாகத் தவறாக நினைக்க வேண்டாம். ஒரே ஒருநாள் என்னுடன் சுற்றுலா வந்தால் போதும். படிப்புக்காக அவுட்டோர் போகிறேன் என வீட்டில் சொல்லிவிடு' எனக் கூறியிருக்கிறார்.
 ' தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் அந்தப் பேராசிரியர் செல்வார்' என்பதை அறிந்த அந்த மாணவி, பல்கலைக்கழக நிர்வாகத்துக்குப் புகார் கடிதத்தைப் பறக்கவிட்டார். மீடியாக்களில் அந்தப் பேராசிரியர் குறித்து தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தை மூடிமறைக்க அந்தப் பேராசிரியர் செய்த காரியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.. பெண்ணாக இருந்தால் படுக்கையையும் ஆணாக இருந்தால் எடுபிடி வேலையையும் பார்ப்பது பி.எச்டி படிப்பில் கட்டாயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
இதையும் தாண்டி, எதையும் எதிர்பார்க்காத எத்தனையோ நல்ல பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிண்டிகேட் உறுப்பினர் பதவியோ துறைகளின் தலைவர் பதவிகளோ வந்து சேருவதில்லை. பல்கலைக்கழகம் என்றில்லாமல், 
அதன் உறுப்புக் கல்லூரிகளில் நடக்கும் பாலியல் விஷயங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை. இங்க அடித்தால் அங்க வலிக்கும் பல்கலைக்கழகங்களின் பல உறுப்புக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, நூலகம், மைதானம் உள்பட ஏராளமான குறைபாடுகள் இருக்கும். இவற்றைப் பற்றி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பெரிதாக எந்த அக்கறையும் செலுத்த மாட்டார்கள். 
காரணம், இந்தக் கல்லூரிகள் யு.ஜி.சி வரையில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருப்பதுதான். ' இங்க அடித்தால் அங்க வலிக்கும்' என்பதுபோல அரசுத்துறைகளில் அதீத செல்வாக்குடன் இவர்கள் வலம் வருகிறார்கள். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கே வராத யு.ஜி.சியின் உயர் அதிகாரிகள், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வருவதன் பின்னணியில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. 
ஆய்வு படிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் லட்சக்கணக்கில் பணம், புறமதிப்பீட்டாளுக்கு தங்கக் காசுகள், ரிசார்ட்டுகளில் அடைக்கலம் என கல்வி வணிகத்தில் வெளியே பேசப்படாத பக்கங்கள் ஏராளம். பி.எச்டி, எம்.ஃபில் படிப்புகளுக்கு ஏன் இவ்வளவு கிராக்கி? 
டாக்டோரல் கமிட்டியின் கட்டாயங்களுக்கு இணங்க வைப்பது எதற்காக? ஆர்டர்லிகளை விடக் கேவலமாக நடத்தப்பட்டும் மாணவர்கள் அமைதியாக இருப்பது ஏன்...எனப் பல கேள்விகள் எழுகின்றன.

கருத்துகள் இல்லை: