ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

வைகோ பயணத்தை தடை செய்ய வேண்டும் : தமிழிசை

மின்னம்பலம்: வைகோ பிரச்சாரப்
பயணத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வைகோ தூத்துக்குடியில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மூன்றாம் நாள் பயணத்தை நேற்று செய்துங்கநல்லூரில் தொடங்கினார். உடன்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பாஜகவினர் அவருக்குக் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து பாஜக-மதிமுகவினரிடையே மோதல் உண்டானது. வைகோவை நோக்கி கற்களும் வீசப்பட்டன. இதையடுத்து போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த ஆறு பாஜகவினர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் பாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ள தமிழிசை வைகோவின் பயணத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை ஒன்றையும் இன்று (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ளார்.

"ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது வாங்கிவிட்டு அதை மறைக்க இன்று ஒரு போலி எதிர்ப்பு பிரச்சார யாத்திரை என்ற பெயரில் வழக்கம் போல் மோடி எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தி வருகிறார் வைகோ" என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தமிழிசை.
"மோடியை விமர்சித்து வருவதை எதிர்த்து உடன்குடியில் வைகோ வந்த வழியில் கூடிநின்று அறவழியில் கருப்பு கொடியும் கருப்பு பலூன்களும் ஏந்தி நின்றபோது அங்கு வந்த வைகோ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வன்முறையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து இருக்கிறார் அவருடன் காரிலிருந்து கொண்டுவந்த இரும்பு கம்பிகளால் எங்கள் தம்பிகளை காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
"வைகோவின் உடன் செல்லும் வன்முறை கும்பல் வாகனத்தில் கத்தி, கம்பு, கற்கள் என்ற ஆயுதங்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள் அவருடைய பிரச்சார யாத்திரை வன்முறை யாத்திரை ஆவதால் அதைத் தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தமிழிசை, உலக நாடுகளால் வன்முறையாளர் வைகோ என்று முத்திரை குத்தப்பட்டு மலேசியா போன்ற நாடுகளில் இன்றும் நுழைய அனுமதி இன்றி திருப்பி அனுப்பப்பட்ட வைகோ, பிரதமர் மோடியை விமர்சிக்கத் தகுதியற்றவர்" என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: