
தினதந்தி : திரிபுராவில் லெனின் சிலையை பாஜக ஆதரவாளர்கள் அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மார்ச் 06, 2018, 09:38 AM
அகர்தலா,
திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. 25 ஆண்டு கால இடது சாரிகள் தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டிய பாஜக முதல் முறையாக அங்கு ஆட்சி அரியணையில் ஏற உள்ளது.
பாஜக பெற்றுள்ள இந்த வெற்றியை அம்மாநில பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்கிடையில், அங்கு பா.ஜ.க தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடசர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்படும் பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ளது. 'பா.ஜ.க மண்ணில் லெனின் சிலை எதற்கு' என்று முகநூல் பக்கங்களில் சிலை அகற்றத்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர். 'இதுதான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்' என்று கண்டனங்களும் குவிந்து உள்ளன. லெனின் சிலை கடந்த 2013 ஆம் ஆண்டு திரிபுராவில் இடது சாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக