சனி, 10 மார்ச், 2018

பெண்களும் அர்ச்சகராக சட்டம் ..விடுதலை சிறுத்தைகள் தீர்மானம்

நக்கீரன் :பெண்களும் அர்ச்சகராகச் சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியான மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில மாநாடு இன்று 10.3.2018 சனிக்கிழமை  சேலம் மாநகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தீர்மானம்.<
தீர்மானம் : இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும்-
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 39 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அவை ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்கள் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்கள் என இரண்டு வகைப்படும். இந்தக் கோயில்களில் பணி புரிவதற்கான அர்ச்சகர்களை நியமிப்பதற்கான விதிகள் ’இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தின்படி’ இயற்றப்பட்டுள்ளன.
1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் ’இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டம் 1959 ல்’ திருத்தம் கொண்டுவந்தார். ஆனால் அதை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஏதுவாக மீண்டும் சட்டம் ஒன்றை இயற்றினார்.


2006 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வகை செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தினோம்.” அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு சட்டம், இப்பொழுது இயற்றப்பட்டிருக்கின்றது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு களையப்படுகிறது.  ஆனால், பாலினப் பாகுபாடு களையப்படவில்லை.  அந்தச் சட்டத்திலே பெண்களும் அர்ச்சகராகலாம் என்கின்ற விதியினைச் சேர்த்து, தொடர்ந்து மகளிருக்குப் புறக்கணிக்கப்பட்டுவரும் ஆலயக் கருவறைகளை நீங்கள் திறந்துவிட வேண்டும்”  ( 25.07.2006) என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரவிக்குமார் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். ஆனால் அந்தத் திருத்தம் அச்சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அப்படியிருந்தும் ஆகம விதிகளின்படித்தான் அர்ச்சகர்களை நியமிக்கவேண்டும் என 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இதனிடையே 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி கே.சந்துரு  வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு ஒன்றை வழங்கினார். (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கையம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த பின்னியக்காள் என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்தக் கோயிலில் பின்னியக்காளின் தந்தை பின்னத்தேவர் என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். அவர் 2004ஆம் ஆண்டுவாக்கில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது ஒரே மகளான பின்னியக்காள் கோயில் பூஜைகளை செய்து வந்தார். பின்னத்தேவர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு தொடர்ந்து பின்னியக்காளே கோயில் பூஜைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னத்தேவருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிற தாயாதிகளுக்குத்தான் வரவேண்டும். அதை ஒரு பெண் செய்யக்கூடாது என்று பிரச்சனை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே தாசில்தார் முன்னிலையில் கிராமத்தார்களின் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கோயிலின் பூசாரியாக ஆண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவு செல்லாது என அறிவித்துத் தன்னையே தொடர்ந்து பூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பின்னியக்காள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு , ” அந்தக் கோயிலில் பூசாரியாக பெண் ஒருவர் இருக்கக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தைத் தாசில்தார் தீர்மானிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பெண் தெய்வமான துர்க்கையம்மன்தான் உள்ளது. அந்தத் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது ” என்று குறிப்பிட்டு பின்னியக்காளே தொடர்ந்தும் அந்தக் கோயிலில் பூசாரியாக பணி புரியலாம் எனத் தீர்ப்பளித்தார்.

ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில்தான் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்கமுடியாது. இந்து அறநிலயத் துறையைச் சேர்ந்த பிற கோயில்களில் பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்பதையும் நீதிபதி கே.சந்துரு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

எனவே, தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும் எனவும், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களிலும் மகளிரை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு ஏதுவாக சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவருமாறும்  இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை: