மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று (மார்ச் 6) நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஒன்றாக இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இது குறித்துப் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, "காவிரி விவகாரம் தொடர்பாகப் பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும், பிரதமரைச் சந்திக்க இதுவரை அனுமதி அளிக்காதது வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்னும் நிதின் கட்கரியின் கருத்து தமிழக விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எதிரான ஓன்று" என்று குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்கு பாஜக எம்.பி. இல.கணேசன் நேரில் சென்று தனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொண்டார். மக்கள் பிரச்சினைக்காக திமுகவும், அதிமுகவும் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியிருப்பது ஆரோக்கியமானதாகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அவையின் மையப்பகுதிக்கு வந்த தமிழக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம் தேதி உத்தரவிட்ட நிலையில், இதுகுறித்து பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதல்வர் கூறினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் மனு அளித்திருந்தார். ஆனால் நேரமில்லா நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துவிட்டார்.மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று தம்பிதுரை நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஆர்பாட்டம் நடந்துள்ளது.
இந்நிலையில் காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி காவிரி சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அழைப்பு அனுப்பியுள்ளது. இதில் தலைமைச் செயலாளரும் பொதுப்பணித் துறைச் செயலாளரும் கலந்துகொள்ள உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக