புதன், 7 மார்ச், 2018

லெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை ! சென்னையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பட எரிப்பு ! படங்கள்

திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் போராட்டம் நடத்தியது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் படம் எரிக்கப்பட்டது. ம.க.இ.க. சென்னைக் கிளையின் செயலாளர் தோழர் வெங்கடேசன் இப்போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். போராட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே மாலை 5.30 மணிக்கு நேரு பார்க் அருகில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் 3 போலீசு வாகனங்களும் குவிக்கப்பட்டன.
லெனின் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், பாசிச பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கண்டித்தும் தோழர்கள் முழக்கம் எழுப்பினர். இதில் பேசிய தோழர் வெங்கடேசன், திரிபுராவில் கிடைத்த வெற்றியில் ஆணவம் தலைக்கேறி தோழர் லெனினின் சிலையை இடித்துள்ளனர். அதே திமிரில்தான் தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என கூறியிருக்கிறார் எச்.ராஜா. இது பெரியார் பிறந்த மண். இங்கு பார்ப்பனியத்திற்கு சவக்குழிதான் மிஞ்சும் எனப் பேசினார்.


சிறுவர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் கோல்வால்கரின் படம் எரிக்கப் பட்ட போது, பாஜகவின் அடிமைப் போலீசு, அவசர அவசரமாக தண்ணீரை தோழர்கள் மீதும், கோல்வால்கர் படத்தின் மீதும் ஊற்றியது. கோல்வால்கர் படம் தீயிடப்பட்டு, பின்னர் கிழித்தெறியப்பட்டது. உடனடியாக அங்கிருந்து தோழர்களை கைது செய்து இழுத்துச் சென்றது போலீசு.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

கருத்துகள் இல்லை: