வெள்ளி, 9 மார்ச், 2018

அதிமுகவுக்கு மத்திய அமைச்சு பதவிகள் ... தெலுங்கு தேசம் விலகல் ஈடு கட்டவாம் ...?

தினமலர் :புதுடில்லி : பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க, பிரதமர், நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகியதால், அதை ஈடுகட்டும் வகையிலும், தே.ஜ., கூட்டணியை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை அமைச்சரவையில் சேர்க்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றது. அரசில், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. 'ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவின்படி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்' என, மத்திய அரசை, ஆந்திராவை ஆளும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் வலியுறுத்தி வந்தது; இதற்கு, மத்திய அரசு சம்மதிக்கவில்லை.
இதையடுத்து, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக, தெலுங்கு தேசம் முடிவு செய்தது.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, விமான போக்குவரத்து துறை அமைச்சர், அசோக் கஜபதி ராஜு, தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர், ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர், தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.இதனால், தே.ஜ., கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



'மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினாலும், தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக மாட்டோம்' என, தெலுங்கு தேசம் தரப்பில் கூறப்பட்டாலும், இதை, பிரதமர் மோடியும், பா.ஜ., மூத்த தலைவர்களும் நம்பவில்லை. லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

இதற்காக, கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றம் செய்ய, பிரதமர் மோடி விரும்புகிறார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.மத்திய அமைச்சரவையை, கடைசியாக, கடந்தாண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி மாற்றி அமைத்தார்.

அப்போது, இணை அமைச்சராக பதவி வகித்து வந்த, நிர்மலா சீதாராமன், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்த, ஐக்கிய ஜனதா தள தலைவரும், அம்மாநில முதல்வருமான, நிதிஷ் குமார், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் ஆட்சி அமைத்தார். மத்திய அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு இடம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

பா.ஜ.,வுடன் இணக்கமாக உள்ள, அ.தி.மு.க.,வுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது, அ.தி.மு.க.,வில் கோஷ்டி சண்டை நிலவியது. இதனால், அமைச்சரவையில், அ.தி.மு.க.,வுக்கு, பிரதமர் இடம் அளிக்கவில்லை.மற்றொரு கூட்டணி கட்சியான, சிவசேனா, மஹாராஷ்டிராவில், பா.ஜ., வுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது.

அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 'அமைச்சரவையில் தங்களுக்கு கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும்' என, சிவசேனா எதிர்பார்க்கிறது.ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு தற்போது பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவை.

தே.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகினால், அதை ஈடுகட்ட, வேறு கட்சிகளை, கூட்டணியில் சேர்க்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால், பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்போது, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு, அதில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து, பா.ஜ., தலைவர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது.

தே.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் விலகினாலும், பா.ஜ., அரசுக்கு ஆபத்து ஏற்படாது.

கருத்துகள் இல்லை: