சனி, 10 மார்ச், 2018

கனிமொழி : பெண்கள் தமது பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எந்த வைத்து விடாதீர் !


மின்னம்பலம் :தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாதுகாக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தால் பெண்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என திமுக எம்பி கனிமொழி எச்சரித்துள்ளார்.
சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பொது இடங்களில் வைத்து பெண்களை தாக்குவது தொடர்கதையாகிவிட்டது. முன்னதாக மதுரையில் ஒருதலைக் காதலால் பள்ளி மாணவி சித்ரா தீயிட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பைக்கை எட்டி உதைத்ததில் கீழே விழுந்து உஷா என்ற கர்ப்பிணிப் பெண் கொடூரமாக உயிரிழந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை மீனாட்சி கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு பி.காம் மாணவி அஸ்வினி காதல் என்ற பெயரில் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நவீனா, சுவாதி, வினோதினி, எனப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திக் கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்தச் சம்பவங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், ''சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் போலீஸார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது.
கல்லூரிக்குப் படிக்கவும் செல்ல முடியவில்லை. வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களைப் பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள், ஆட்சியாளர்களே'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: