வியாழன், 8 மார்ச், 2018

மகளிர் தினம்: உழைக்கும் பெண்களின் குரல்!

மகளிர் தினம்: உழைக்கும் பெண்களின் குரல்!மின்னம்பலம் :உழைக்கும் பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தியதன் மூலம் உருவான நாளே மார்ச் 8 உலக மகளிர் தினம். உலக அளவில் பெண்கள் இன்று முன்னேற்றமடைய வழிவகுத்த நாளாகக் கருதப்பட்டாலும், உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களில் பலருக்கு மகளிர் தினம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. குறிப்பாக, உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு. சில பெண்களுக்கு மார்ச் 8 மகளிர் தினம் என்பது தெரிந்திருந்தாலும், எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பது தெரிவதில்லை.
அவ்வாறு உழைக்கும் பெண்களான வனிதா (40) மற்றும் கீதாவை (32) சந்தித்தோம். அவர்களிடம் மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது, ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் கேள்விகளை எழுப்பினோம்.
ஒரே ஒரு சாக்லேட்- வனிதா
நான் மாச சம்பளத்துக்கு டெய்லரா வேலை செஞ்சிட்டு இருக்கேன். மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடுறாங்கனு தெரியும். ஆனால் ஏன் கொண்டாடுறாங்கனு தெரியாது. மகளிர் தினத்துக்கு எங்களோட ஓனர் சாக்லேட் குடுத்து வாழ்த்து சொல்லுவாங்க. அப்புறம் நாங்க மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுவோம். 20 வருஷமா டெய்லரா வேலை பாக்குறேன். குடும்ப சூழ்நிலை நானும் வீட்டுக்காரரும் வேலைக்கு போனாதான் பசங்கள படிக்க வெக்க முடியும். அப்போதான் அவங்க எங்கள மாதிரி கஷ்டப்பட மாட்டாங்க. என் பொண்ணு நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்; 100 பேருக்கு அவ வேலை போட்டு தரணும். பெண்கள் எப்பவும் தன்னம்பிக்கையா சொந்த காலுல நிக்கணும். நாலு விஷயம் தெரிஞ்சி வெச்சிக்கணும். ஆண்கள் அவங்களுக்கு உறுதுணையா இருக்கணும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல இப்போ. அவங்க வேலைக்குப் போற நேரம்லாம் மாறிகிட்டே இருக்கு. அதனால அவங்களுக்கு பாதுகாப்பு அதிகமா கிடைக்கணும் அவ்ளோதான்.

வெள்ளத்தை வென்றேன் -கீதா

என் பேரு கீதா. நா டிஃபன் கடை வெச்சிருக்கேன். எனக்கு மகளிர் தினம் பத்திலாம் தெரியாதுங்க. எப்போ கொண்டாடுறாங்கணும் தெரியாது. காலைல டிஃபன் கடை போடுவேன். சாயங்காலம் பஜ்ஜி கடை போடுவேன். வீட்டு வேலைய பாத்துப்பேன். என் வீட்டுக்காரருக்கு உடம்பு முடியாம போச்சு கொஞ்ச நாளுக்கு முன்னால. அவரு கொஞ்சம் உதவி பண்ணுவாரு கடைய பாத்துக்க. எனக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க. ஒருத்தி ஆறாவது படிக்குறா, இன்னொருத்தி ஐந்தாவது படிக்குறா. ஸ்கூல் முடிஞ்சி வந்ததும் எனக்கு உதவி பண்ணுவாங்க. இப்படியா வாழ்க்கை ஓடுது. சென்னைல வெள்ளம் வந்தப்போ என் வீட்ல இருந்த எல்லா பொருளும் போச்சு. ரொம்பவே ஒடஞ்சி போய்ட்டோம். அப்பவும் தன்னம்பிக்கைய விடல. முன்னவிட அதிகமா உழைக்கணும்னுதான் தோணுச்சு.
இப்போ காலைல டிஃபன் மட்டும் இல்லாம மதிய சாப்பாடும் செய்ய ஆரம்பிச்சிட்டேன். பெண்கள் எப்பவும் தன்னம்பிக்கையா நேர்மையா இருக்கனும். நேர்மையா இருக்கனும். நேர்மையா வேலை செய்யனும். எல்லாரும் பெண் பிள்ளைகள் பொறந்துட்டா கஷ்டபடுவாங்க, எனக்கு 2 பெண் குழந்தைகள். அவங்களுக்கு இப்பத்துல இருந்தே தன்னம்பிக்கை தைரியத்த குடுத்து வளத்துட்டு வரேன். அவங்க நல்லா படிக்குறாங்க. அவங்களுக்கு விருப்பமான துறைல சாதிக்கனும். இப்போ பாதுகாப்புதான் ரொம்ப கொறஞ்சிட்டே வருது. பகல்லகூட நடமாட முடியல. செயினை அறுத்துட்டு போறாங்க. பெண்கள் வெளிய வரும்போது கொஞ்சம் பாதுகாப்பா வரணும். அரசாங்கமும் அதுக்கு நடவடிக்கை எடுக்கணும்.
உழைக்கும் பெண்களிடம் நாம் உரையாடியதிலிருந்து, அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான தெம்போடுதான் இருக்கிறார்கள். ஆனால் பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்புதான் அவர்களுக்கான அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது தெரிகிறது.
தொகுப்பு: பூங்கொடி

கருத்துகள் இல்லை: