மதுரை மாவட்டம், மேலூர், அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் தேர்வு எழுத பள்ளிக்கு வந்திருந்தனர். நேற்று வணிகவியல் தேர்வு நடைபெற்றது. இந்தப் பிரிவில் பயிலும் மாணவர் அர்ஜுன் (18) திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து படித்து வருகிறார்.< அர்ஜுன் நேற்று காலை பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார். தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே வந்துவிட்ட அர்ஜுன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருவரும் அர்ஜுனை தாக்கினர். திடீரென கார்த்திக் ராஜாவும், சரவணக்குமாரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜுனை சரமாரியாகக் குத்தினர். தடுக்க முயன்ற அர்ஜுனின் கைவிரல் துண்டானது.
அர்ஜுனின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். கத்தியால் குத்திய கார்த்திக் ராஜா, சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அர்ஜுன் ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அர்ஜுன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர் அர்ஜுனை கத்தியால் குத்திய மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். என்ன காரணத்திற்காக அகதிகள் முகாமில் தங்கி கல்வி பயின்று வரும் அப்பாவி மாணவரை கத்தியால் குத்தினர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை, ஆயுத கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது பள்ளிப் பருவத்திலேயே தற்போது ஆரம்பித்துள்ளது கவலை தரும் விஷயம். இளம் பருவத்திலேயே மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவதும், பெற்றோர் சரியாக வழிகாட்டாததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக