வியாழன், 5 ஜனவரி, 2017

பெங்களூரில் புத்தாண்டு.. பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் .. வேடிக்கை பார்த்த போலீஸ் ..


பெங்களூரு : கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சில சமூக விரோதிகள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சாலையில் தனியாக சென்ற பெண்ணை கடத்த முயற்சித்தது ஆகிய சம்பவங்களால், அங்கு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக, பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.< கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் பெங்களூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, போதையுடன் கூட்டத்தில் பங்கேற்ற சில சமூக விரோதிகள், அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். ஆத்திரம் : இது குறித்து ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகளாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகரமான பெங்களூரில், பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குறித்து, அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு, 'கூட்டம் அதிகமுள்ள இடங்களில், இது போன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான். பெண்கள், மேல்நாட்டு பாணியில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும்' என அவர் கூறியது, பொது மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 'ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை ஏற்றுள்ள அமைச்சர் ஒருவர், இது போன்று பேசியது சரியல்ல' என, மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்ததுடன், விளக்கமும் கேட்டுள்ளது.

இந்நிலையில், அதே நாளில், பெங்களூரு, கம்மனஹள்ளியில், அதிகாலை, 2:00 மணியளவில் ஆட்டோவிலிருந்து இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்ற பெண்ணை, பைக்கில் வந்த இருவர் தடுத்து நிறுத்தி, கடத்த முயற்சித்தனர். இதற்கு, அந்த பெண், கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராடினார். இதையடுத்து, அந்த பெண்ணை கீழே தள்ளி, அவரிடமிருந்த கைப்பையை பறித்துச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும், அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.<>சம்பவம் குறித்து அந்த பெண், புகார் கொடுக்கவில்லை; ஆனாலும், மீடியாக்களில் இந்த செய்தி வெளியான பின், தேவைப்பட்டால் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, அவர் கூறியுள்ளார். இதேபோல், 'புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்தும், யாரும் புகார் கொடுக்கவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்கவில்லை' என, போலீசார் கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவங்கள் நடந்துள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்களையும் ஆதாரமாக வைத்து, வழக்கு பதிவு செய்ய, போலீசார் முன் வந்தனர்.

கருத்துகள் இல்லை: