சனி, 7 ஜனவரி, 2017

தமிழக அரசு சார்பில் கடிதம் ... பன்னீர்செல்வம் - சசிகலா போட்டா போட்டி?

அதிமுகவில் அனல் பறக்கும் நீயா நானா? ஓபிஎஸ் – சசிகலா இடையே கடும் கடிதப் போர்! பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் தனித்தனியாக கடிதம் எழுதி வருவது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடுவே போட்டா போட்டி நடந்து வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக, தனது மறைவு வரை ஜெயலலிதாவே பதவி வகித்து வந்தார். இதனால், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக, அவர் பிரதமருக்கு கடிதம் எழுதும்போதெல்லாம், ஒரு அறிக்கையோடு விஷயம் முடிந்துவிடும். முதல்வர் என்ற அடிப்படையிலான கடிதம் மட்டுமே பிரதமருக்கு செல்லும். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இரட்டை அதிகார மையங்கள் உருவாகியுள்ளன.
மீனவர் பிரச்சினை மோடிக்கு கடிதம் எழுதும் விவகாரங்களில் இந்த தலைமைகள் நடுவேயான போட்டா போட்டி வெளிப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஒரு கடிதம் எழுதினார். பன்னீர்செல்வம் கடிதம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறித்த கடிதம் அது. இலங்கைச் சிறைகளில் உள்ள 61 மீனவர்கள் மற்றும் 116 படகுகள் ஆகியவற்றை உடனடியாக அந்நாட்டு அரசு விடுவிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து அன்றைய தினமே, இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் என்ற வகையில், சசிகலாவும் கடிதம் எழுதினார். இரு கடிதங்களுமே ஒரே பொருளை சுட்டிக்காட்டுவதாகவே இருந்தன. இந்நிலையில் மறுநாளான இன்றும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு சிறப்பு தபால் தலை மற்றும் நாணயம் வெளியிட வேண்டும் என்று மோடிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதிய சில மணி நேரங்களுக்குள்ளாக, இதே கோரிக்கையுடன் சசிகலாவும், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விருவரும் அடுத்தடுத்து ஒரே விஷயத்துக்காக கடிதம் எழுதுவது மத்திய அரசின் பார்வையில் தமிழக அரசு குறித்த மோசமான தோற்றத்தையே ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இரு அதிகார மையங்களும் பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் தவறில்லை என்றபோதிலும், குறைந்தபட்சம், ஒரே விஷயத்தை வலியுறுத்தியாவது கடிதம் எழுதுவதை தவிர்க்கலாம் என்பதே அவர்கள் பார்வையாக உள்ளது. இந்த விஷயம் குறித்து தம்பிதுரை, சசியிடம் போட்டுக் கொடுத்து விட்டார். சசி பன்னீரை கார்டன் வரச்சொல்ல, என்ன விஷயம் என்று போனில் கேட்டாராம். மேலும் கடுப்பானார் சசி என்கிறார்கள். கடிதம் நான் எழுதிக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கூற நான் முதல்வர் செய்யும் வேலை எதுவோ அதைத் தான் செய்கிறேன் என்று கூறிஇருக்கிறார். லைவ்டே


கருத்துகள் இல்லை: