வியாழன், 5 ஜனவரி, 2017

அதிமுக எம்எல்ஏக்கள் 136 பேருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கோடி ரூபாய் ,,,சசிகலா முடிவு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் கட்சிக்குள் சசிகலாவிற்கு எதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை. அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக ஏகமனதாக வி கே சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று தம்பிதுரை அறிக்கைவிட்டார். இந்நிலையில் “சசிகலாவிற்கு அதிமுகவிற்குள் பெரிதாக எதிர்ப்பில்லை. ஆனாலும் ஒரு சில எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி இல்லாமல் இல்லை. ஆனால் அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முன்னோடியுமான செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் கட்சியை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்து அறிக்கைவிட்டார் செங்கோட்டையன். ஆனால், கட்சியை விட்டு வெளியேறினால், மாற்றுக் கட்சியில் இணைவதோ, புதிய கட்சி தொடங்கி நடத்துவதோ எளிதான காரியமாக இருக்காது என்று அதிமுகவிலே அமைதி காத்துவிட்டார் செங்கோட்டையன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களில் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க திமுக தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. குறிப்பாக அதிமுகவிலிருந்து திமுக சென்ற எம்எல்ஏக்கள் அதிமுக எம்எல்ஏக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்ஏல்ஏக்களை அமைதிப்படுத்த, அதிமுக எம்எல்ஏக்கள் 136 பேருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கோடி ரூபாய் வழங்க சசிகலா முடிவு செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, “பொங்கல் பரிசு தரும் எண்ணம் எதுவும் இல்லை. மேலும் அதிமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு செல்கிறார்களா? இல்லை திமுகவிலிருந்து அதிமுகவிற்கு வருகிறார்களா என்பது போகப் போகத் தெரியும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: