மின்னம்பலம்: நீலகண்டன் 90களின் நடுப்பகுதியில் ஒய்வு பெற்றார். அதன் பிறகு, தனது பூர்விகமான செட்டிப்பாளையத்துக்கு திரும்பினார்.
பொருளாதார பேராசிரியரான இவர், தனது வாழ்வின் பெரும்பகுதியை சென்னையிலேயே கழித்தார். முதலில் ஆசிரியராகவும், பிறகு‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி’ கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
பிறகு அவர் தனது கிராமத்துக்கு புறப்பட்டார். கரூரில் அவரது குடும்பத்துக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் அவர்கள் கொய்யா, சப்போட்டா, மா, தென்னை போன்ற மரங்களை பயிரிட்டிருந்தனர். எனவே நீலகண்டன் விவசாயத்துக்கு திரும்பலாம் என எண்ணினார்.
20 வருடங்களுக்குப் பிறகு அவர் அம்முயற்சியில் தோல்வியைத் தழுவினார். அவர் தன்னிடமிருந்த 40 ஏக்கரில் 30 ஏக்கரை விற்றார்.
தற்போது அவரது நிலத்தில் சப்போட்டா மட்டுமே விளைகிறது.‘நானொரு தோல்வியடைந்த தோட்டக்கலை விவசாயி’ என்று வறண்ட புன்னகையோடு கூறுகிறார் நீலகண்டன்.
நீலகண்டனின் நிலம் அமராவதி ஆற்றுக்கு மிக அருகில் உள்ளது. மணல் சுரண்டுபவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நீலகண்டனின் கிராமத்துக்கு வந்துள்ளனர். உள்ளூர் மணல் குவாரிகளின் ஆதிக்கத்தால் 2004 க்குள்ளாகவே ஆற்றுப்படுகைகளில் உள்ள மணல் அளவு 1 அடி குறைந்ததுள்ளது.
அளவுக்கு அதிகமான மணல் கொள்ளையைத் தடுக்க நீலகண்டன் மற்றும் சிலர் இணைந்து நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். அவர்களது கிராமத்தின் அருகிலுள்ள அமராவதி ஆற்றின் 10 கிமீ பரப்புக்கு மணல் குவாரி பணிகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். நீதிமன்றமும் அதன்படி, மணல் குவாரிக்கு தடை உத்தரவு பிறப்பிக்க முன்வந்தது. ஆனால் எதிரணியினரின் சாமர்த்தியத்தால் அந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகு நடந்தவை அதிர்ச்சி அளிக்கக்கூடியவை. நூற்றுக்கணக்கான லாரிகள் ஆற்றுப்படுகையில் உள்ள மணலை மூன்றே மாதங்களில் சுரண்டித் தீர்த்தன. கிராமத்தை சுற்றி 10 கிமீ சுற்றளவில் 24 அடி வரை மணல் சுரண்டப்பட்டது.
இது நிலத்தடி நீரில் பாதகத்தை ஏற்படுத்தியது. ஆற்றுமணலானது கடல் பாசியைப் போல செயல்பட்டு நிலத்தடி நீரை பாதுகாத்து வந்தது. ஆனால் மணல் சுரண்டப்பட்டவுடன் நிலத்தடி நீர் குறையத் துவங்கியது. மணல் குவாரிகள் வருவதற்கு முன்பே விவசாயத்துக்கு நீர் பாய்ச்சுவதில் நிலத்தடி நீர் சற்றே குறையத் தொடங்கியிருந்தது. கடந்த 2004ல் நிலத்தடி நீரின் அளவு 250 அடியாக குறைந்திருந்தது. மணல் குவாரிகளின் வருகைக்குப் பிறகு அது மேலும் குறையத் தொடங்கியது.
நீலகண்டன் இது தொடர்பாக பேசுகையில், ‘500 அடியில் ஒரு அங்குலம் தண்ணீர் மட்டுமே இருக்கிறது. எனவே நிலத்தில் ஒரு இன்ச் பைப்பை மட்டுமே செருக முடியும். ஆனால் 5 இன்ச் பைப் மூலம் மட்டுமே 10ஏக்கருக்கு பாசனம் செய்ய முடியும். 3 இன்ச் பைப் மூலம் 6 ஏக்கர், 1இன்ச் பைப் மூலம் 2 ஏக்கர் மட்டுமே பாசனம் செய்ய முடியும்’ என்று கூறினார்.
நீலகண்டன் தனது நிலத்தை விற்றுவிட்டு, சப்போட்டா பரியிடுவதில் மட்டும் கவனம் செலுத்தினார். காரணம் சப்போட்டா மட்டுமே குறைந்த நீரில் உற்பத்தி செய்ய முடியும். கிடைக்கிற நீரை வைத்து அதை மட்டுமே அவரால் செய்ய முடியும்.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மட்டுமலாது, இந்தியா முழுக்கவே எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் மணல் சுரண்டல் இது போலவே அசுர வளர்ச்சியை அடைந்திருப்பதைக் காணலாம். கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் குறைவு, கிணறுகள் வற்றுதல், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் உப்பு நீர் ஊறியது ஆகிய அவலங்கள் அரங்கேறின.
இந்த சுற்றுசூழல் மாற்றங்கள் யாவும் மணல் சுரண்டலின் பக்க விளைவுகளே. ஆனால் மணல் சுரண்டலின் பாதிப்பு வெறுமனே சுற்றுசூழல் மாற்றங்களோடு மட்டுமே நின்று விடவில்லை. மணல் சுரண்டலின் அசுர வளர்ச்சியால் தமிழ்நாடு வேறு பல வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக