புதன், 4 ஜனவரி, 2017

தாமிரபரணியை உறுஞ்சும் 27 நிறுவனங்கள் .. அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமான அளவில் ...


தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு, நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் கோககோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்களுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்தது. 'ஆற்றின் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழும் மாவட்டங்களில் குடிநீருக்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் போது, இந்த தொழிற்சாலைகளுக்கு மட்டும் எப்படி தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாம்?' என முனைவர்.D.A.பிரபாகரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் பெப்ஸி மற்றும் கோககோலா ஆகிய இரு நிறுவனங்களுக்கும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கத் தடை விதித்திருந்தது. ஆனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, இன்னும் பல்வேறு நிறுவனங்கள் அதிகளவில் தண்ணீர் எடுப்பதும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி சில ஆலைகள் தண்ணீர் எடுப்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

சமூக ஆர்வலரான ராமையா அரியா, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதில் கிடைத்துள்ள பதில்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன. தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக சிப்காட் ஆனது 27 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் தற்போது இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது கோககோலா மற்றும் பெப்ஸி ஆகிய இரு நிறுவனங்களுக்கு மட்டும்தான். மீதி இருக்கும் நிறுவனங்கள் இன்னும் தண்ணீர் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
கோககோலா, பெப்ஸி ஆகிய இரு நிறுவனங்களுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும், தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாக கிடையாது. மாறாக 1998-ம் ஆண்டு தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் அரசாணையின் படி, மாநில அரசின் சிப்காட் ஆனது நாள் ஒன்றிற்கு 3 மில்லியன் காலன்கள் அளவுக்கு தண்ணீர் எடுக்கும் அனுமதியை பெற்றுள்ளது. எனவே இதன்படி தமிழக அரசின் சிப்காட்தான், அதன் வளாகத்துக்குள் இயங்கும் ஆலைகளுக்கு நீரை ஆற்றில் இருந்து உறிஞ்சி விநியோகிக்கும்.
சிப்காட்
இதன்படி அனுமதி பெற்ற நிறுவனங்கள்தான் கோககோலா மற்றும் பெப்ஸி ஆகிய இரண்டும். 2015/16-ம் ஆண்டில் கோககோலாவின் சவுத் இந்தியா பாட்டலிங் கம்பெனி நாள் ஒன்றுக்கு, 18 லட்சம் லிட்டர் நீர் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பெப்ஸி நிறுவனத்தின் பிரதிஷ்டா பிசினஸ் சொல்யூஷன் கம்பெனிக்கு, நாள் ஒன்றிற்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இரு ஆலைகளுக்கும் நீரைப் பெற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே சமயம் நாள் ஒன்றிற்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் ATC டயர்ஸ் நிறுவனம் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. 2 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் Bosch நிறுவனமும் இன்னும் தண்ணீர் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுபோக மற்ற நிறுவனங்களும் தண்ணீர் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இங்குதான் சிக்கலே ஆரம்பிக்கிறது. தண்ணீர் பஞ்சம் நிலவும்போது, தொழிற்சாலைகளுக்கு மலிவான விலையில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைப் போலவே இதுவும் நிச்சயம் கவனிக்கப் படவேண்டிய விஷயம். அதேபோல சில ஆலைகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விடவும், அதிக அளவில் தண்ணீர் எடுப்பதையும் அரசின் பதில்கள் உறுதிப் படுத்துகின்றன.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களின் விவரம் (2015-16)

வ.எண் நிறுவனத்தின் பெயர் ஒரு நாளைக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் தண்ணீரின் சராசரி அளவு (லிட்டர்களில்) (2015-2016) ஒரு நாளைக்கு பயன்படுத்தும் தண்ணீரின் சராசரி அளவு (லிட்டர்களில்) (2015-2016)
1 ATC டயர்ஸ் (பி) லிமிடெட் 1000000 937288
2 ATC டயர்ஸ் ரெசிடென்ட்சியல் குவார்ட்டர்ஸ் 15000 200
3 ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 100000 129970
4 வோல்கெம்(I) லிமிடெட் 10000 24849
5 கீதா என்டர்பிரைசஸ் 3000 1460
6 கால் மைக் இண்டஸ்ட்ரி 1000 1395
7 M.M.காட்டன் மில்ஸ் 10000 1756
8 ஷாங்குயின் கெமிக்கல் இண்டஸ்ட்ரி 20000 3145
9 BOSCH லிமிடெட். 200000 32480
10 குளோப் ரேடியோ கம்பெனி 8500 12790
11 நோவா கார்பன்ஸ் இந்தியா (பி) லிமிடெட் 100000 95500
12 நோவா கார்பன்ஸ் இந்தியா (பி) லிமிடெட் 10000 37620
13 பிரதிஷ்டா பிசினஸ் சொல்யூசன்ஸ் (பி) லிமிடெட் 1500000 113500
14 ஃபேமிலி பிளாஸ்டிக்ஸ் (பி) லிமிடெட் 5000 4070
15 மதுரை வீவிங் மில்ஸ் 5000 2800
16 VLS என்டர்பிரைசஸ் 700 3568
17 R.P இன்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் 1000 2090
18 சவுத் இந்தியா பாட்டிலிங் கம்பெனி (பி) லிமிடெட் 1800000 305115
19 ஆதித்யா ஃபுட்ஸ் 5000 1858
20 நடராஜன் என்டர்பிரைசஸ் 3000 0
21 SSS என்டர்பிரைசஸ் 3000 4770
22 என்விரோ ஜானிட்டர்ஸ் 5000 900
23 புவி கேர் (பி) லிமிடெட் 1500 4750
24 பேப்ரோஸ் ஸ்பீசிஸ் (பி) லிமிடெட் 5000 13200
25 S.S கன்வெர்சன் 2000 3148
26 Thiru.A.Antony Residence 50000 8480
27 TNEB 3000 1821
இதுபற்றிக் கூறும் ராமையா அரியா, "முதலில் இந்த வழக்கு குறித்து நான் அறிந்துகொண்ட போது கோககோலா மற்றும் பெப்ஸி ஆகிய நிறுவனங்கள்தான், ஆற்றில் இருந்து நேரடியாக நீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு அனுமதி பெற்றுள்ளது சிப்காட்தான். சிப்காட் மூலம்தான் இரு நிறுவனங்களும் ஆற்றில் இருந்து தண்ணீர் பெறுகின்றன. அதாவது சிப்காட்தான் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும். அதனையே இந்த இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொள்ளும். அதாவது தாமிரபரணி ஆற்றின் நீரானது தனியார் நிறுவனங்களால் உறிஞ்சப்படுவதில்லை. மாறாக அரசின் சிப்காட்தான் ஆற்றில் இருந்து நீரை எடுத்து, தன்னிடம் அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு பிரித்து அளிக்கின்றன.
ராமையா அரியா அதேபோல நீதிமன்றத்தில் திரு.பிரபாகரன் அவர்கள் தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளாக கோககோலா மற்றும் பெப்ஸி ஆகிய இரு நிறுவனங்களை சேர்த்திருந்தனர். ஆற்றில் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் மொத்தம் 27 இருக்கும் போது, ஏன் இந்த இரு நிறுவனங்களை மட்டுமே இந்த வழக்கில் அவர்கள் சேர்த்தார்கள் என நீதிமன்றம் கேட்கவில்லை. தாமிரபரணி ஆற்றில்  தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என்றால் நீதிமன்றம் என்ன செய்திருக்க வேண்டும்? அதில் நீர் எடுக்கும் சிப்காட்டை, குறைந்த அளவு நீர் எடுக்கும்படி அறிவுருத்தியிருக்கலாம். அல்லது அனைத்து நிறுவனங்களுக்கும் தடை விதித்திருக்கலாம். ஆனால் கோககோலா மற்றும் பெப்ஸி ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கில் மற்ற நிறுவனங்கள் நீர் எடுப்பதை பற்றியும் கணக்கில் கொள்ளவில்லை.
இந்த வழக்கில் மேலும் சந்தேகங்களும் நமக்கு எழுகின்றன. இந்த வழக்கை பெப்ஸி மற்றும் கோககோலா ஆகிய இரு நிறுவனங்களுமே நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவில்லை. அது ஏன் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதேபோல இந்த பிரச்னையில் பெப்ஸி , கோககோலா மற்றும் சிப்காட்டின் கருத்துகள் இன்னும் எங்குமே பதிவாகவில்லை. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர மொத்த அளவில் 53% அளவுக்கு நீர் எடுக்கும் மற்றொரு நிறுவனம் பற்றி யாருமே கருத்தில் கொள்வதில்லை. எல்லா நிறுவனங்களுமே வணிக நோக்கங்களுக்கு மட்டுமேதான் பயன்படுத்தப்படுகிறது. எனவே வறட்சியை சமாளிப்பதுதான் உங்கள் நோக்கம் என்றால் மற்ற எல்லா நிறுவனங்களையுமே கணக்கில் கொள்ளவேண்டும். இந்த வழக்கைப் பற்றி முதலில் நான் நினைத்தது என்னவென்றால், கோககோலா மற்றும் பெப்ஸி இரண்டு மட்டும்தான் ஏதோ சிறப்புச் சலுகையில் தண்ணீர் எடுக்கின்றன என நினைத்தேன். ஆனால் கிடைத்த தகவல்களை கொண்டு பார்க்கும் போது நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. எனவே இதுபோன்ற விவகாரங்களில் அரசு ஒரு நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்" என்றார்.
தாமிரபரணி
பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றவரான நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான டி.ஏ.பிரபாகரனிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எந்த தொழில் நிறுவனங்களுக்கும் எதிரானவன் இல்லை. நமக்கு தண்ணீர் எந்த அளவுக்கு அவசியமோ அதே போல தொழில் வளர்ச்சியும் அவசியமானது என்பதை நம்பக் கூடியவன். ஆனால், தொழில் வளர்ச்சிக்காக மக்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன்.
பிரபாகரன் ஆனாலும், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்பட்டு உள்ள சிப்காட் வளாகமானது, போக்குவரத்து தொடர்பான பாகங்களை தயாரிக்கும், தொழில் வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்க மட்டுமே தொடங்கப்பட்டதாக அரசு விதிமுறைகளிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது, ஆனால், பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களைப் பொறுத்தவரை நீராதாரத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடியவை. அவை இங்கு செயல்பட விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை. நீராதாரத்தை நம்பி செயல்படும் நிறுவனங்களுக்கு, வேறு சில இடங்களில் உள்ள சிப்காட் வளாகத்தில் தொழில் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் விதிமுறையை மீறியே குளிர்பான நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன.
மக்கள் விவசாயத்துக்கு மட்டும் அல்லாமல் குடிநீருக்கே அவதிப்படுகிறார்கள். இந்த வருடம் பாபநாசம் அணையில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலிலும், குளிர்பான நிறுவனங்கள் தங்களின் வணிக நோக்கத்துக்காக தாமிரபரணித் தண்ணீரை பெறுவது என்பது கண்டிக்கக்கூடியது. அதனால் தான் அந்த நிறுவனங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கக் கூடாது என வலியுறுத்தினேன். ஆனால், அந்த குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட பின்பு, இரு நிறுவனங்களும் நீதிமன்றத் தடையை விலக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், தடையை விலக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நானும் எனது தரப்பில் மனு செய்திருக்கிறேன். இப்போது தாமிரபரணி தண்ணீர் பொதுமக்களின் குடிநீருக்கே கிடைக்காத நிலை உள்ளது. அதனால் தாமிரபரணி தண்ணீரை சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கொடுத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலையை உருவாக்கி விடக்கூடாது என்பதையும் வலியுறுத்தினேன்.
மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்துக்கும் தேவையான அளவுக்கு வைத்து விட்டு, அளவுக்கு அதிகமாக இருக்கும் நீரை தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், மக்களே தாகத்தில் இருக்கும் சூழலில், தண்ணீரை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு சொற்பத் தொகைக்கு தண்ணீரைக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதைத் தான் நானும் செய்தேன்’’ என்கிறார் ஆவேசமாக.
சிப்காட் நிறுவனத்தின் அதிகாரிகள் தரப்பில் நம்மிடம் பேசுகையில், ‘‘அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கு இங்கு தொழில் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்போதே அவர்களுக்கு இடவசதி மட்டும் அல்லாமல், போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக பேசப்பட்டு இருக்கிறது.. அதன்படியே நாங்கள் அவர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறோம்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த இடைக்கால ஆணையின் அடிப்படையில் பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு மட்டும் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது தவிர, அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக தாமிரபரணி நீரை எடுப்பதில் சிரமம் உள்ளது. அதனால் அடுத்த 10 நாட்களுக்குப் பிறகு தண்ணீர் விநியோகத்தை நிறுத்தும் சூழல் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக் காட்டி முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பி வைத்து உள்ளோம்’’ என்று முடித்துக் கொண்டனர். ஞா.சுதாகர், ஆண்டனிராஜ்      விகதன விகடன்

கருத்துகள் இல்லை: