புதன், 4 ஜனவரி, 2017

ஸ்டாலின் : கலைஞர் வரமுடியாத சூழ்நிலையில் செயல் தலைவர் பதவி.... மகிழ்ச்சி இல்லை


M.K.Stalin says he is not happy to be elected as DMK's working president
சென்னை: சென்னையில் அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிய திமுக செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு ஸ்டாலின் நன்றியுரையாற்ற அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் நன்றியுரையாற்ற வரவில்லை.
ஏற்புரையாற்ற மட்டுமே வந்துள்ளேன்.
உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கலைஞர்  வராமல் பொதுக்குழு நடக்கிறது. தலைவரான கலைஞர் வர முடியாத நிலை இருப்பதால் திமுக விதிமுறைகளில் திருத்தம் செய்து என்னை செயல் தலைவராக்கியுள்ளனர்.

செயல் தலைவராக நியமித்தது திடீரென எடுத்த முடிவு இல்லை. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. ஆனால் அவருக்கு இப்போது ஓய்வு தேவைப்படுகிறது. கலைஞர்  நல்லபடியாக உடல்நலம் தேற வேண்டும் என்பதால் ஓய்வு கொடுத்துள்ளோம்.
நான் சிறு வயது முதல் அரசியலில் ஈடுபாடு கொண்டு செயலாற்றினேன். பல்வேறு பதவிகள் எனக்கு கட்சியில் கிடைத்தன. அனைத்துமே நியமன பொறுப்பு கிடையாது. ஜனநாயக முறையில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்று பதவிகளுக்கு வந்தேன்.
ஆனால், முன்பெல்லாம் புதிய புதிய பொறுப்புகளுக்கு வந்தபோது, மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன். ஆனால் இப்போது மகிழ்ச்சியடையவில்லை. தலைவர் (கருணாநிதி) உடல் நலம் இப்படி இருக்கும் சூழலில் செயல் தலைவராக பொறுப்பேற்பதால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. உங்கள் அன்பால்தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
செயல் தலைவர் என்றாலும், கட்சி தலைவருக்கு துணை நிற்கும் வகையில்தான் எனது பணி அமையும். தலைவர், பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர், கழக முன்னோடிகள் காட்டும் வழியில் நின்று உறுதியாக இயக்கப் பணியை உங்கள் ஒத்துழைப்போடு நான் ஆற்றுவதற்கு தயாராக இருக்கிறேன். இதுவே எனது ஏற்புரை.
கருணாநிதி அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வது உண்டு. பல நிகழ்ச்சிகளில் நானும் அதை சொல்லியுள்ளேன். நான் சென்னை மேயராக பொறுப்பேற்றபோது, "அது பதவியில்லை, பொறுப்பு" என்று என்னிடம் கலைஞர் கூறினார். மக்களுக்கு பொறுப்போடு கடமையாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதை பொறுப்பு என குறிப்பிடுகிறேன், என்று கலைஞர்  குறிப்பிட்டார். அதேபோல செயல் தலைவர் பதவியை பதவியாக கருதவில்லை. பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். கலைஞர் , அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இதயமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: