ஞாயிறு, 1 ஜனவரி, 2017

"சசிகலா பேச்சு" டப்பிங் படம் .. போயஸ் வசனகர்த்தாக்கள் எழுதி பேசி பேசி வாயசைத்து காமிராவை பார்த்து பேசிய...

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, சசிகலா நிகழ்த்திய முதல் உரையை ஆச்சரியத்தோடு கவனிக்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். ‘ பொதுக்குழுவில் பேச வேண்டிய பேச்சை, தலைமைக் கழகத்தில் பேசினார். அவரது பேச்சு இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்குக் காரணமே ம.நடராசன்தான்’ என்கின்றனர் கார்டன்
வட்டாரத்தில்.

சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், தலைமைப் பதவிக்கு சசிகலா பெயரை முன்மொழிந்தனர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள். இதையடுத்து, இன்று நண்பகல் 12.20 மணியளவில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டு, விரிவான உரை நிகழ்த்தினார் சசிகலா. ‘தலைமைக்கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டச் செயலாளர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளே, அனைத்து உடன் பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி’ என உரையைத் தொடங்கினார்.
முதல்வர் உடல்நலனில் ஏற்பட்ட பாதிப்புகள்; காப்பாற்ற முடியாமல் போனது; அவருடன் 33 ஆண்டுகளாக வலம் வந்தது; கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டது என அனைத்தையும் உருக்கமாகவும் கண்ணீர் வடியும் கண்களுடன் பேசி முடித்தார் சசிகலா. இதுவரையில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்தவர், மைக் முன் உரையாற்றியது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
“பொதுக்குழுவில் பேசுவதற்காக தயாரித்திருந்த குறிப்புகளைத்தான் தலைமைக் கழகத்தில் பேசினார் சசிகலா. ஆனால், அவருக்காக உருவான முழு உரையை அவர் வாசிக்கவில்லை. அந்த உரையின் இறுதி வரிகளில், ‘ அம்மா இல்லாத இந்தக் காலகட்டத்தில், நம்மைச் சுற்றி எப்படிப்பட்ட சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கிறது என்பதை கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்’ என முடிப்பதாகத்தான் இருந்தது. பா.ஜ.க மற்றும் தி.மு.கவை குறிவைக்கும் வகையில் இந்த வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார் சசிகலா” என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
“தொண்டர்கள் மத்தியில் அம்மா இல்லாத குறையைப் போக்கும் வகையில் பேசுவது என முடிவு செய்யப்பட்ட பிறகு, பேச்சுக்கான குறிப்புகளை தயாரிக்கும் பணிகள் துவங்கின. நடராசன் வழிகாட்ட மூன்று பேர் கொண்ட குழுதான் பேச்சுக்கான உரையைத் தயாரித்தது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படிக் கட்டிக் காப்பாற்றினார் என்பதில் தொடங்கி, என்ன செய்யப் போகிறோம் என்பது வரையில் குறிப்புகள் தயாரானது. இதன்பின்னர், கார்டனில் ஓர் அறையில் சிறிய மைக் ஒன்றை அமைத்து, பேசிப் பார்த்தார். பேச்சின் ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன் சொல்லிக் கொடுத்தார். எந்த இடத்தில் எந்த மாதிரிப் பேச வேண்டும் என்பதை விளக்கினார். இதில் திருப்தியடைந்த பிறகு, உடை விஷயத்தில் கவனம் செலுத்தினார். இதுவரையில், கோவில்களுக்குச் செல்லும்போது மட்டும் பட்டுச்சேலை உடுத்திக் கொண்டு செல்வார். வேறு எந்த ஆடம்பரங்களும் இருக்காது. ஆனால், கட்சித் தலைவர் என்ற தோற்றத்தைக் கொண்டு வருவதற்காக, கறுப்பு கலர் வாட்ச், தேர்ந்த உடை என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தார் தினகரனின் மனைவி அனுராதா. திட்டமிட்டபடியே பொதுச் செயலாளராக உருவாகிவிட்டார் சசிகலா. இந்த உரையில் மிஸ்ஸான ஒரே விஷயம், ஜெயலலிதாவைப் போலச் சொல்வதற்கு ஒரு குட்டிக் கதையைத் தயாரித்து வைத்திருந்தார். கடைசி நேரத்தில் கதைக்கு கத்திரி போட்டுவிட்டார்கள்” என விவரித்து முடித்தார்.
‘எனக்கு அம்மா தான் எல்லாம். அம்மாவின் கழகமே எனது உலகம். கோடான கோடி கழக கண்மணிக்களுக்காகவும் நான் மீதம் உள்ள வாழ்வை கழிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்மை விமர்சிப்பவர்கள் கூட நம்மை பின்பற்றும் அளவுக்கு கழகத்தை வழிநடத்துவோம்’ என அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்தே கருத்தைச் சொல்லிவிட்டு, கார்டனுக்கு விரைந்தார் சசிகலா.
பொதுவாக, நிழல்கள் எப்போதுமே பேசுவதில்லை. அவைகள் பேச ஆரம்பித்தால் ராஜ்ஜியங்கள் நடுங்கும் என்பார்கள். தற்போது அண்ணா தி.மு.கவின் ராஜ்ஜியத்திற்குள் நிழலாக இருந்த சசிகலா நிஜத்திற்குள் வந்திருக்கிறார். கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலத்தை போகப் போக பார்ப்போம்!
– ஆ.விஜயானந்த்
படங்கள்-சு.குமரேசன்
Vikatan.com

கருத்துகள் இல்லை: