செவ்வாய், 23 நவம்பர், 2010

T.R.Rajakumari கறுப்பு-வெள்ளை கால தமிழ்த் திரையுலகில், தன் காந்தக் கண்களாலும்



ஒரு வர்ணனை: கறுப்பு-வெள்ளை கால தமிழ்த் திரையுலகில், தன் காந்தக் கண்களாலும்... கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனக்கென தனிஇடத்தை உருவாக்கிக் கொண்டவர் டி.ஆர். ராஜகுமாரி (தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜகுமாரி). திருமணமே செய்து கொள்ளாமல், சகோதரரின் (இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா) குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்த தியாக தீபம்!
ஒரு சாதனை: எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர்., சிவாஜி என அந்தக் கால முன்னணி கதாநாயகர்கள் ஐந்து பேருடனும் நடித்த முதல் நடிகை. சென்னையில் தன் பெயரிலேயே சொந்தமாகத் திரையரங்கை கட்டியதன் மூலம், 'தியேட்டர் கட்டிய முதல் தமிழ் நடிகை' என்ற பெயரையும் பெற்றார்.

ஒரு பாராட்டு: ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘சந்திரலேகா’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், அதில் ஆடிய ஜிப்ஸி நடனம் அனைவரையும் ஈர்த்த ஒன்று. க்ளைமாக்ஸில் வரும் டிரம் டான்ஸ், இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. 'மனோகரா' படத்தில் இவர் ஏற்று நடித்த ‘வசந்தசேனை’ என்ற வில்லி கேரக்டர், இன்றைக்கு... வரலாறு!

ஒரு சம்பவம்: அது... 1941. 'தமிழ் சினிமாவின் தந்தை' என்ற புகழுக்குரிய இயக்குநர் கே.சுப்ரமணியம் (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை), தன்னுடைய 'கச்சதேவயானி' படத்துக்காக கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள், நடிகை எஸ்.பி.எல். தனலட்சுமி இல்லத்துக்குச் சென்றிருந்தபோது, தனலட்சுமியின் அக்கா மகள் ராஜாயி காபி கொண்டு வர, பார்த்த நொடியே ‘இவர்தான் கதாநாயகி’ என்று முடிவு செய்துவிட்டார் சுப்பிரமணியம். ஆனால், ‘இந்தப் பெண் கதாநாயகியா... உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்று மேக்கப் டெஸ்ட்டின்போது கிண்டலடித்திருக்கிறார் ஒப்பனை நிபுணர்.

அதையெல்லாம் மீறி, அந்த ராஜாயி, 'ராஜகுமாரி'யாக பெயர் மாறி, அந்தப் படத்தில் அறிமுகமானார். முதல் படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களை பைத்தியமாக்கிவிட்டார்!

கருத்துகள் இல்லை: