கொழும்பில் நாளை மறுதினம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் பங்குபற்றுவதற்காக அந்நாட்டு திரையுலகத்தைச் சேர்ந்த 97பேர் உட்பட 2,300பேர் இலங்க வந்துகொண்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். எத்தகைய எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும், இந்திய திரையுலகைச் சேர்ந்த இவர்கள் மேற்படி விழாவில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் குறித்த கலைஞ்ர்களின் விஜயம் நேற்று இரவு முதல் இடம்பெற்று வருகின்றது என்று அமைச்சர் கூறினார்.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுகததாஸ உள்ளக அரங்கம் மற்றும் பண்டாரநயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபம் போன்றவற்றில் முன்னெடுக்கப்பட்ட அலங்காரப் பணிக்ள் 95வீதக்மளவில் பூர்த்தியடைந்துள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஏற்பாடுகளுக்காக 4,650 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சர்வதேச ரீதியில் 300ஊடகவியலாளர்கள், 2,000 பிரதம அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளதோடு அவர்கள் தங்குவதற்காக 2,650 ஹோட்டல் அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த திரைப்படவிழாவை ஸ்டார் தொலைக் காட்சியில் ஜுலை மாதம் 11ஆம் திகதி 110 நாடுகளைச் சேர்ந்த 600 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். இதன் போது எமது நாட்டுக்கு உலகம் பூராவும் கிடைக்கவுள்ள அங்கீகாரமும் பிரபலமும் பல நூறு மடங்கு நன்மையை தரவுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
11ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடாத்தும் 9ஆவது நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. இது கொரியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுப் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் முதல் நாளான 3ஆம் திகதியன்று இரவு இந்திய திரையுலக நட்சத்திரங்களான தியா மிர்ஸா, விவேக் ஒபரோய் ஆகியோர் தொகுத்து வழங்கும் ஃபாஷன்ஷோ இடம்பெறவிருக்கின்றது.
இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். இரண்டாம் நாளான 4ஆம் திகதி, சர்வதேச வர்த்தக சங்க மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மதியம் இந்திய நட்சத்திரங்களும், இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பங்கு கொள்ளும் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.
சுனில் செட்டி மற்றும் ஹிர்திக் ரோஷன் தலைமையிலான இந்திய நட்சத்திர அணிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடவுள்ளன. வெற்றி பெறும் அணி சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியுடன் மோதும். அத்துடன் திரைப்படக் காட்சிகளும் இந்த விழாக் காலத்தில் இடம்பெறவுள்ளன.
இறுதி நாளான 5ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. அந்நிகழ்வு இடம் பெறும் சுகததாஸ உள்ளக அரங்கு, மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம் பெறும் இடங்களில் ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால், விருது வழங்கும் விழா கிரிக்கெட் போட்டி, திரைப்படக் காட்சிகள் எல்லாவற்றுக்கும் உல்லாசப் பயண சபை, இலங்கை கிரிக்கெட் சபை என்பனவற்றில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று பிரதியமைச்சர் லஷ்மன் யாப்பா மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக