நெருப்புக்கு வந்த மடல்:கனடா புலிகளின் சொத்து பிரச்சினை!
June 2nd, 2010
யூன் 01,2010அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!
உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்
கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.
இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.
தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.
இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.
மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.
ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.
ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.
குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணிநேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.
எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம். இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.
- பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.
www.cmr.fm www.tamilvision.tv www.ctr24.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக