டெல்லி: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி, கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகையில், கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு ராமசாமி வருவதை தமிழக காவல்துறை விரும்பவில்லை.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ராமசாமி பேசியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும், பிரபாகரனின் மறைவுக்கும் இந்தியத் தலைவர்களே காரணம் என்றும் ராமசாமி பேசியுள்ளார். இதையடுத்து ராமசாமியை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அவரது கருத்துக்கள் கோபத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. அவர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வராமல் இருந்தால் தமிழக காவல்துறையினர் மகிழ்ச்சி அடைவார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தலைவர்களை தமிழக அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கிடைத்து விடாமல் பார்த்து வருகின்றனர்.
நாங்கள் வெளிநாட்டினரை வரவேற்கிறோம். அதேசமயம், நமது விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராக, அதுவும் இந்திய மண்ணுக்கு வந்து பேசுவதை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ராமசாமி இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஈழத் தமிழர்கள் குறித்தும், ஈழத் தமிழர் போராட்டம் குறித்தும் தெரிவித்த கருத்துக்களையே தற்போது தமிழக அரசு ஆட்சேபித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், விடுதைலப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மத்திய அரசு நாடு கடத்திய செயலையும் ராமசாமி கடுமையாக கண்டித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ராமசாமி கோவை மாநாட்டுக்கு வருவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே ராமசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக