தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலைமைத்துவப் போட்டி ஆரம்பம்!
Posted in June 2nd, 2010
by salasalappu in கட்டுரைகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பினர் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிய வருகிறது.இந்த விஜயத்தில் கலந்து கொண்டு யாழ் திரும்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்திற்குச் சென்று தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.இவரது கருத்துக்களின் பிரகாரம், கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு இப்போது அடிக்கடி நினைவு தப்பி விடுகிறது. காலையில் அவர் கூறுவது மாலையில் அவருக்கு நினைவில் இருப்பதில்லை. இந்நிலையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைக் கூறி வருகிறார்.
இந்த நிலையில் இன்னும் ஓரிரு வருடங்கள் மாத்திரமே சம்பந்தன் உயிர் வாழ்வார். இவரது இறப்புக்கு முன்பதாக கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தன்வசம் எடுத்துக் கொள்ள மாவை சேனாதிராஜா தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாவையின் கைக்கு போய் விடக் கூடாது என்பதில் ஈ. சரவணபவன் கண்ணுங் கருத்துமாக இருக்கிறார்.
வன்னி விஜயத்தின் போது தனது நிறுவனப் பத்திரிகையான உதயன் பத்திரிகைகள் 1000 பிரதிகளை சரவணபவன் கட்டி எடுத்துக் கொண்டே சென்றிருந்தார். இந்த 1000 பிரதிகளையும் அங்குள்ள மக்களுக்கு இலவசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக சரவணபவன் வழங்கினார்.
ஆக, மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்த உதயன் பத்திரிகையை மட்டுமே அதுவும் 1000 பிரதிகள் இலவசமாக வழங்க முடிந்துள்ளது.
சில நேரங்களில் இது அம்மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு (மலம் கழித்த நிலையில்) ஒரு தீர்வாக அமையுமென கூட்டமைப்பினர் எண்ணி இருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் சரவணபவனாவது எண்ணி இருப்பார்.
‘உதயன்’ பத்திரிகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகையாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கியமை குறித்து கொதித் தெழுந்துள்ள மாவை தரப்பினர் சரவணபவன் தரப்பு மீது கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது சரவணபவனுடன் பத்திரிகை மூலமான விளம்பரம் கருதிய சுயலாப நோக்கில் கூட்டுச் சேர்ந்துள்ள ஸ்ரீதரன் எம்.பி.யின் கூற்றுப்படி கூட்டமைப்பின் தலைமைப் பதவி மாவைக்கும் போய்விடாமல், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் போய்விடாமல் சரவணபவனுக்குக் கிடைக்கக் கூடிய வகையிலான சதி முயற்சிகள் தற்போது மிகவும் தந்திரோபாயமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்ரீதரன், செல்வம் போதைப் பொருட்களைக் கடத்தி எமது இளைஞர்கள் பலரின் சீரழிவுக்குக் காரணமானவர் என்றும் இதனால் கூட்டமைப்பின் தலைமைத்துவம் அவரிடம் போக வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், சரவணபவனின் சப்றா நிதி மோசடி தொடர்பில் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் இயக்கத்தின் மீது இன்னமும் தான் அதீத பற்று வைத்திருப்பதாகக் கூறியுள்ள ஸ்ரீதரன், பிரபாகரனின் மரணத்தை அடியோடு மறுத்துள்ளதுடன், மனித உரிமைகள் பற்றிப் பேசிக் கொண்டே புலிகள் இயக்க உறுப்பினர்களில் பலரை பாதுகாப்புத் தரப்பினரிடம் அற்ப மது போத்தல்களுக்காகக் காட்டிக் கொடுத்த றெமிடியஸ் போன்றவர்கள் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தமை வரவேற்கத்தக்கதென்றும் கூறியுள்ளார்.
- யாழோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக