என் கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். ஆனால் அவரோ உறவினர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னைப் பிரிய நினைக்கிறார் என்று குடும்ப நலக் கோர்ட்டில் தெரிவித்தார் நடிகை விந்தியா.
சங்கமம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விந்தியா. இவருக்கும், நடிகை பானுபிரியாவின் தம்பி கோபிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
திருமணமான ஆறுமாதங்களுக்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து சில மாதங்கள் பிரிந்திருந்தனர். பின்னர் கடந்த ஆண்டு கணவர் கோபி, விந்தியாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நடிகை விந்தியா குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த 2 வழக்கிலும் நடிகை விந்தியாவும், அவரது கணவர் கோபியும் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு விந்தியாவும், அவரது கணவரும் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
இருவரையும் சமரச மையத்துக்கு வரவழைத்து ஓய்வு பெற்ற நீதிபதியும், ஆலோசனை மைய அதிகாரியும் கலந்தாய்வு நடத்தினர். அப்போது நடிகை விந்தியா கூறுகையில், "கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் என் மீது பல்வேறு பழிகளை போட்டார்கள். என்னை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டார்கள். என் கணவர் நல்லவர்தான். அவர் என்னை நன்றாக கவனித்து கொண்டார். அவரை பிரிவதற்கு எனக்கு விருப்ப மில்லை. சேர்ந்து வாழவே விரும்புகிறேன்" என்று கண்ணீருடன் கூறினார்.
இதைத் தொடர்ந்து கோபியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் அவருடன் பேசிப் பார்த்தனர்.
ஆனால் அவரோ, "எனக்கு இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை. என்னை சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார். நான் ஒருபோதும் எனது பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் பிரிந்து வரமாட்டேன்" என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 7-ந்தேதிக்கு நீதிபதி ராமலிங்கம் ஒத்தி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக