மதுரை: தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் குதித்து, மேலூர் தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அழகிரிக்கு திமுகவில் பதவி கொடுத்த பின்னர் அவரது வளர்ச்சி வேகம் பிடித்தது. தொடர்ந்து இடைத்தேர்தல்களில் அழகிரியின் வியூகம் வெற்றி தேடித் தந்ததால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்தார்.
ஆனால் அழகிரிக்கோ மத்திய அமைச்சர் பதவியில் சற்றும் நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. திமுகவின் தலைமைப் பதவியின் மீது அவர் விருப்பம் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பாக அவருக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நீரு பூத்த நெருப்பு போல புகைச்சல் இருந்து வருவதாகவும் ஏற்கனவே பலமான பேச்சு உள்ளது. சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று அதிரடியாக கூறியிருந்தார் அழகிரி.
இதுகுறித்து கருத்து கேட்ட செய்தியாளர்களிடம், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தட்டும். நானும் போட்டியிடுகிறேன், வெற்றி பெறுபவர் தலைவராகிக் கொள்ளட்டும் என்றார் அழகிரி.
இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் அழகிரி போட்டியிடப் போவதாக மதுரை வட்டார செய்திகள் கூறுகின்றன. மேலூரில் அண்ணன் போட்டியிடப் போகிறார். வெற்றி பெற்று முதல்வர் பதவிக்கும் அவர் உயரப் போகிறார் என்று அழகிரி ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
மேலும் மேலூர் தொகுதியில் பல திட்டங்களையும் படு வேகமாக நிறைவேற்றி வருகிறார்களாம்.
இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் அழகிரி மேலூரில் போட்டியிடப் போவதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுரை பகுதி திமுகவினர் உறுதியாகவே கூறி வருகின்றனர்.
1 கருத்து:
கருத்துரையிடுக