புதன், 2 ஜூன், 2010

நகைப்புக்குரியது இந்திய மீனவர்களைத் தாக்குவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி. ஒளிபரப்புச் செய்த விவரணம் ஒன்றை வாபஸ் பெறுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ‘பிளட் ஒன் வோட்டர்’ என்ற தலைப்பில் என்.டிடிவி. ஒளிபரப்புச் செய்த விவரணச் சித்திரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், குறித்த தொலைக்காட்சி சேவைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
குறித்த விவரணச் சித்திரத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது கோரிக்கையில்,
“மூன்று முதல் ஆறு லட்சம் வரையிலான மக்கள் முட்கம்பிகளிலான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் செனோய் வெளியிட்ட கருத்து அபத்தமானது. 30,000 பேர் மட்டுமே தற்போது இடம்பெயர் முகாம்களில் எஞ்சியிருக்கின்றனர்.
பேராசிரியர் செனோயின் கருத்து அவரது கல்வித் தகைமைகளுக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவுள்ளது. முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய்களை அவர் வெளியிட்டுள்ளார்.
விவரணச் சித்திரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பல காட்சிகள் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்டவை.
இந்த விவரணச் சித்திரத்தில் கருத்து வெளியிட்டுள்ள சில தமிழக மீனவர்கள் அப்பட்டமான பொய்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கை இராணுவத்தினர் 300 தமிழக மீனவர்களைப் படுகொலை செய்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.
இந்திய கடற்பரப்புக்குள் பிரவேசித்து இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைத் தாக்குவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது.
பொருளாதார ரீதியாக நன்மை அடையும் நோக்கில் அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரும் இலங்கைத் தமிழர்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது புகலிடக் கோரிக்கையை நியாப்படுத்தும் வகையிலேயே அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
என்.டி.டி.வி சேவையின் ஆக்கத்திறன் குறித்து இலங்கை மிகுந்த நன்மதிப்புக் கொண்டுள்ளது. என்.டி.டிவியின் சென்னைப் பிரிவு வெளியிட்டுள்ள இந்த விவரணச் சித்திரம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ள தருவாயில் இவ்வாறான ஆக்கங்களை ஒளிபரப்புச் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: