கரவெட்டி கிழக்கு கட்டைவேலி தல்லையபுலம் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர் அங்கிருந்த பெண்ணை படுகொலை செய்துவிட்டு சுமார் 200 பவுண் தங்க நகைகளையும் பல இலட்சம் ரூபாவையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
வடமராட்சி பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவத்தில் ஜெயபாலன் விஜயலக்ஷ்மி (54 வயது) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். முற்பகல் 11 மணிக்கும் 11.30 மணிக்குமிடையே இவர் படுகொலை செய்யப்பட்டு நகைகளும் பணமும் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது கணவரும் ஒரேயொரு மகனும் வெளிநாட்டில் வசிக்கையில் இவர் தனது தாயுடன் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது மகனுக்கு திருமண ஏற்பாட்டை மேற்கொண்டு வந்த நிலையிலேயே நேற்று இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டில் தெரிந்தவர்களுக்கு அடகுக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.
கொலையாளி இவரது கழுத்தை வயரினால் இறுக நெரித்து கொன்று விட்டு வீட்டினுள்ளிருந்த சுமார் 200 பவுண் நகைகளையும் பல இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். வீடு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடியே கொலையாளி இவற்றை எடுத்துச் சென்றதற்கான அறிகுறியாக வீட்டுப் பொருட்கள் யாவும் வெளியே இழுத்து சிதறிக்கிடந்தன. காலை வேளையில் இவரது தாயார் உறவினர் வீடொன்றுக்குச் சென்று விட்டு நண்பகல் 12 மணியளவில் வந்த போதுதான், இவர் கொலை செய்யப்பட்ட விபரம் அயலவர்களுக்கு தெரியவந்துள்ளது.
கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வாயால் இரத்தம் வழிந்தோடி உறைந்த நிலையில் மகள் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து தாய் அலறிய போது தான் அயலவர்களான உறவினர்கள் அங்கு வந்து நடந்த சம்பவத்தை அறிந்துள்ளனர். நகை அடகு பிடிப்பதுடன் வட்டிக்கும் பணம் கொடுத்து வந்ததால் இவரிடம் வீட்டில் பெருமளவு நகையும் பணமுமிருந்ததாக கூறப்படுகிறது.
இவரது கொலை தொடர்பாக பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா விசாரணை நடத்திய போது, மகள் அடகு பிடிப்பவரெனவும் 200 பவுணுக்கும் மேல் நகைகளும் பல இலட்சம் ரூபா பணமும் இருந்ததாகவும் மகளை கொலை செய்தவர்கள் அவற்றையெல்லாம் ஒன்று விடாது கொண்டு சென்றுவிட்டதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், நேற்று நண்பகல் 11 மணியளவில் இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்ததாகவும் அவரை இந்தப் பெண் வீட்டு வாசலுக்கு வந்து கூட்டிச் சென்றதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக