செவ்வாய், 1 ஜூன், 2010

தமிழ்ப் பொலிஸார் நியமனம் தொடர்பாடல் சிக்கலைத் தீர்க்கும்

தமிழ், முஸ்லிம் மக்கள் பொலிஸ் நிலையங்களில் ஏதேனும் முக்கிய கருமங்களை ஆற்றச் செல்கின்றபோது மொழித் தொடர்பாடல் காரணமாக எதிர்நோக்குகின்ற சிக்கல் புதிய விடயமல்ல.... இத் தகைய பிரச்சினை வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளிலேயே கூடுதலாக எதிர்நோக்கப் படுகிறது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களில் அநேகமானோர் சிங்கள மொழி புரியாத வர்களாக உள்ளனர். இவர்கள் தத்தமது பிரதேசங் களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முக்கிய கரு மங்களை ஆற்றச் செல்கின்றபோது மொழி புரியாமல் திண்டாடுகின்றனர். இவர்கள் சில வேளைகளில் தொடர்பாடல் சிக்கல் காரணமாக தங்களது கருமங் களை நிறைவேற்றிக்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பி விடுவதுமுண்டு.

அதுபோன்று அங்குள்ள சிங்களப் பொலிஸாரும் தமிழ் மொழி புரியாமல் தடுமாறுகின்றனர். கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாத சங்கடமான சூழ்நிலையொன்றுக்கு பொலிஸார் ஆளாக நேரிடுகிறது.

இது போன்றுதான் வடக்கு, கிழக்கில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஏதேனுமொரு கருமத்துக்காக பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் நிலைமை ஏற்படுமிடத்து சிங்களமொழி புரியாததன் காரணமாக அவதியுறுகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை மொழித் தொடர்பாடலானது பெரும் சிக்கலுக்குரியதாக விளங்குகிறது.

இரு தரப்பினருக்கிடையிலான புரிந்துணர்வுக்கு மொழி தடையாக அமைந்து விடுவதுண்டு. பொலிஸ் நிலையங் களில் அக்காலம் தொட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டு வரும் அசெளகரியங்களுக்கு தொடர் பாடலில் உள்ள கோளாறுதான் முக்கிய காரணியாக விளங்குகிறதென்பது உண்மை.

தமிழ் பேசும் மக்கள் தங்களது சொந்த மொழியில் பொலிஸ் நிலையங்களில் கருமங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் இன்றைய அரசாங்கம் ஆரம்ப காலம் தொட்டே அக்கறை செலுத்தி வருகிறது. மலையகப் பிரதேசங்களில் தமிழ் பேசும் பொலிஸார் நிய மிக்கப்பட்டமையை இதற்கொரு உதாரணமாகக் கூறலாம்.

வட பகுதியிலும் தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதில் கடந்த காலங்களில் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதி லும் அம்முயற்சி பயனளிக்கவில்லை. புலிகளின் அச் சுறுத்தல் காரணமாக அங்குள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள முன்வரவில்லை. யாழ்நகரில் வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பொலிஸார் ஒரு சிலர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தமிழ் இளைஞர், யுவதிகள் ஏராளமானோருக்கு பொலிஸ் துறையில் தொழில் கிடைக்கும் வாய்ப்பும் புலிகளின் அச்சுறுத்தலால் பறிபோனது.

நீண்ட காலத்துக்குப் பின்னர் வடக்கு இளைஞர், யுவதிகள் அச்சமின்றி பொலிஸ் சேவையில் இணைந்து கொள் ளும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. வடக்கிலிருந்து பொலிஸ் சேவைக்காகத் தெரிவு செய்யப்பட்ட 251 இளைஞர், யுவதிகள் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

மேற்படி பொலிஸார் பயிற்சியை நிறைவு செய்ததும் பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படுவர். தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களில் எதிர்கொள்ளும் மொழிச் சிக்கல் படிப்படியாகத் தீர்வதற்கு மேற்படி வடக்கு இளைஞர், யுவதிகளின் நியமனங்கள் உதவுமென்பதில் சந்தேகமில்லை.
- தினகரன் தலையங்கம்-

கருத்துகள் இல்லை: