நேர்த்திக் கடன் செலுத்த ஆலயத்திற்குச் சென்றவரை 10 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் புங்குடுதீவில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த சோம சுந்தரம் சுப்பிரமணியம் வயது (56) என்பவரே இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது,
பிரஸ்தாப நபர் புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருடா வருடம் கிளிநொச்சியிலிருந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்திச் செல்பவர். வன்னி யுத்தம் இடம் பெற்ற வேளை இடம்பெயர்ந்து முகாமில் இருந்து மீள்குடியேற்றப்பட்ட பின்னர், நேர்த்திக்கடன் செலுத்து வதற்காக நேற்றுமுன்தினம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்குத் தனது மனைவியுடன் வந்துள்ளார்.
ஆலயத்தில் நேர்த்திக்கடனை முடித்து விட்டு சென்றவேளை அப்பகுதியில் வந்த இருவர் தாம் சாராயம் வாங்கித் தருவதாகவும் 250 ரூபாய் பணம் தரும்படியும் கேட்டுள்ளனர். தனது பணப்பையிலிருந்து 250 ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்த வேளை, அதிக பணம் இருப்பதைக் கண்ட அவர்கள் சாராயம் தூர இடத்தில் விற்பதாகவும் அவரையும் வரும்படி அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர்களின் கதையை நம்பி அவர் ஆலயத்திற்கு அருகில் மனைவியை இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். இந் நிலையில் பலமணி நேரமாகியும் கணவரைக்காணவில்லை என அஞ்சிய அவரது மனைவி அயலில் நின்றவர்களுக்கு சம்பவம் பற்றி தெரியப்படுத்த, அவர்கள் அப் பகுதியில் தேடியபோது புங்குடுதீவு பிள்ளையார் கோவில் பற்றைக்குள் அவர் சடலமாக கிடப்பதைக் கண்டனர்.
இதேசமயம் இறந்தவரை அழைத்துச் சென்றவரில் ஒருவர் அங்கு வந்தபோது மனைவி அவரை இனங்காட்ட பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனாவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக