திங்கள், 31 மே, 2010

ராஜ்சபா சீட் தர வேண்டும் என்றும் பாமக ,திமுகவுடன் மீண்டும் கூட்டணிக்குத் தயார்

சென்னை: திமுகவுடன் மீண்டும் கூட்டணிக்குத் தயார் என்றும், தங்களுக்கு ஒரு ராஜ்சபா சீட் தர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரண்டு கடிதங்கள் எழுதியதையடுத்தே அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க முன் வந்ததாக திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராமதாஸ் எழுதிய கடிதங்கள் திமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. பின்னர் பாமகவுடன் கூட்டணி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ராமதாஸின் இந்தக் கடிதத்தின் சாரமும் அதில் இடம் பெற்றது.

இது தொடர்பாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் 26-4-2010 தேதியிட்டும், அதைத் தொடர்ந்து 14-5-2010 தேதியிட்டும், முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதங்கள் இந்தக் குழுவின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வைக்கப்பட்டன. அந்தக் கடிதங்களில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டிருப்பதின் சுருக்கம் வருமாறு:

"2006ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று பாமக போட்டியிட்டது. அந்தத் தேர்தலுக்குப் பின்னர் தங்களது தலைமையில் திமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கு பாமக தனது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்ததுடன், அதற்கான தனது ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தது. அன்று முதல் இன்றுவரையில் எந்தவொரு நிலையிலும் திமுக அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாமக மாற்றிக் கொள்ளவே இல்லை.

இடையில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்து விட்டோம் (திமுகவை விமர்சித்தது, அதிமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றது ஆகியவை). நீங்களும் மறந்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

முன்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் தங்களின் இப்போதைய முயற்சிக்கு பாமக முழு ஆதரவு அளித்து, சட்டப் பேரவையில் நடைபெற்ற மேலவை அமைப்பது குறித்த வாக்கெடுப்பில் திமுகவுடன் இணைந்து வாக்களித்தது. இந்த இணக்கம் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அந்த வகையில் அடுத்த ஆண்டில் (2011ல்) நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட விரும்புகிறோம் என்று பாமக சார்பில் உறுதி கூறுகிறோம்.

2006ம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் 6 எம்எல்ஏக்களைக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளித்தீர்கள். 2008ம் ஆண்டில் 9 எம்எல்ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது கடிதங்களில் கூறியிருந்தார்.

டாக்டர் அவரது கடிதத்திலே குறிப்பிட்டுள்ளதைப் போல; 2006 மற்றும் 2008ம் ஆண்டில் ராஜ்யசபா தேர்தலுக்குத் தேவையான எம்எல்ஏக்களைப் பெற்றிராத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திமுக தனது வாக்குகளை வழங்கி, அடுத்தடுத்து, இரண்டு பேரை ராஜ்யசபா எம்பிக்களாக்கி தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்ற பண்பாட்டைப் பெற்றிருந்ததை யாரும் மறப்பதற்கில்லை.

அந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான், அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக; 1997ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில்; திமுக தோழமையை மதிக்கும் என்பதற்கு உச்சகட்டமாக, முதலில் அளித்த வாக்குறுதி மாறாமல்- தன் கட்சி வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தாமல்- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், என்.ஆர்.அப்துல் காதர் ஆகிய மூவருக்கும் ஆதரவளித்து, அந்த மூவரையும் வெற்றி பெறச் செய்து, தோழமைக் கட்சிக்கான நல்லுணர்வு இலக்கணத்தை நிலைநாட்டிய பெருமையும் திமுகவுக்கு உண்டு என்பதை நாடறியும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கு சட்டமன்றத்தில் 30 இடங்கள் இருந்தபோதிலும், மற்ற தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமென்ற நிலையிருந்தும், 23-1-2004 அன்று மக்களவைத் தேர்தல் நேரத்தில் திமுகழகம் பாமகவுக்கு கொடுத்த உறுதி மொழிப்படி- திமுக அந்த ஒரு இடத்தில் போட்டியிடாமல், 19 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாமகவிற்கும், 25 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசுக்கும் தனது 30 வாக்குகளைப் பங்கிட்டு அளித்து அன்புமணியையும், சுதர்சன நாச்சியப்பனையும் அந்த ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறச் செய்தது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: