ஞாயிறு, 28 மே, 2017

இலங்கை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 122-ஆக உயர்வு.. சர்வதேச உதவியை நாடும் இலங்கை ..

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 120-ஐ எட்டி உள்ளது. மேலும் 150 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களின் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கீலனி ஆறு மற்றும் காலு கங்காவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 90-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்த நிலையில் பலி எண்ணிக்கை 122-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்த இந்திய பிரதமர் மோடி ‘பாதிக்கப்பட்டு உதவியை எதிர்பார்க்கும் இலங்கை மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.


தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து, கீலனி ஆற்றையொட்டி வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனது. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு மற்றும் நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதரத்துறை மந்திரி ரஜிதா சென்னார்த்தே தெரிவித்துள்ளார். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 185 நிவாரன முகாம்களில் இதுவரை 493,455 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரன உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 97 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த முப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாலைமலர்

கருத்துகள் இல்லை: