ஞாயிறு, 2 அக்டோபர், 2011

அரச காணிகளை பதிவதே நோக்கம்; எம்.பியிடம் காணி அமைச்சுச் செயலர் தெரிவிப்பு

அரச காணிகளை பதிவதே நோக்கம்; சரவணபவன் எம்.பியிடம் காணி அமைச்சுச் செயலர் தெரிவிப்பு
 வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் காணிப்பதிவின் நோக்கம் அரச காணிகளில் பெர்மிட் பெற்றும் பெறாமலும் இருப்பவர்களுக்கு நிரந்தப் பதிவுகளை வழங்குவதே என்று, தன்னை நேற்றுச் சந்தித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவானிடம் தெரிவித்திருக்கிறார் காணி அமைச்சின் சிரேஷ்ட செயலாளரும் மண்ணின் மகிமை திட்ட முகாமையாளருமான பி.எம்.பி. உதயகாந்த.
வடக்கில் காணிகளைப் பதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம், பீதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சுச் செயலருக்கு நேரில் விளக்கினார். 
அதற்குப் பதிலளித்த செயலர், அரச காணிகளில் பெர்மிட் பெற்றும் பெறாமலும் இருப்பவர்களுக்கு நிரந்தரப் பதிவுகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றும் அரச காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளின் பதிவுகளை மேற் கொள்ளுமாறு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள போதும் அவற்றுக்கு சான்றிதழ்கள் வழங்குவது உடனடிச் சாத்தியமானது அல்ல என்றும் செயலாளர் தெரிவித்தார் என ஈ.சரவணபவன் கூறினார். 
இதேவேளை, வடக்கில் நல்லூர் உள்ளிட்ட 5 பிரதேச செய லகப் பகுதிகளில் காணிகளைப் பதிவதற்கான கடைசித் திகதி நேற்று என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், பதியத்தவறியவர்களின் விண்ணப்பங்கள் தொடர்ந்து ஏற்கப்படும் என்று வட மாகாணக் காணி ஆணையாளர் தயானந்தா தன்னிடம் உறுதியளித்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்

கருத்துகள் இல்லை: