ஞாயிறு, 14 நவம்பர், 2010

75:பீ. சுசீலா என்ற பெயரைக் கேட்டதுமே துள்ளாத மனமும்

Susila
இசையில் இலயிக்காத இதயங்களை இவ்வுலகில் காண்பதரிது. இனிய குரல் தரும் இசை இதில் ஒரு தனி ரகம். அந்த ரகத்தில் யுகம் மறக்கச் செய்யும் ஒரு குரல் தான் தென்னிந்தியப் பின்னணிப் பாடகி இசையரசி பீ. சுசீலாவின் குரல்.
பீ. சுசீலா என்ற பெயரைக் கேட்டதுமே துள்ளாத மனமும் துள்ளும். அவரின் குரலினிமையைக் கேட்டாலோ பசித்த குழந்தை கூட பால் மறக்கும். அவ்வளவு இனியது அவரது குரல். இந்த இன்குரல் இன்று தன் 75வது அகவையைக் கொண்டாடுகிறது. குரல் தான் வயதாகியதே தவிர அதன் இனிமை அதே பசுமையோடு இன்றும் நிலைத்திருக்கிறது. அவரின் குரலினிமையில் எம்மையே மறந்த கணங்கள் ஏராளம் இருக்கலாம். ஆனால் அவரின் வரலாற்றை அறிந்த உள்ளங்கள் அற்பமாகவே இருக்க முடியும். அதற்குப் பரிகாரம் தான் கீழ்வரும் இதிகாசம்.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜய நகரம் என்ற ஊரிலே 1935ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி பிறந்தவர் பீ. சுசீலா. தந்தை முகுந்தராவ். தாய் பெயர் ஷேசாவதாரம். தந்தையார் ஒரு பிரபல வக்கீல். குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையான சுசீலா பாடசாலைக் கல்வியை எட்டாம் தரத்துடனேயே நிறுத்திக் கொண்டார். அவரிடமிருந்த இசையார்வமே இதற்குக் காரணமாகியது. மகளின் ஆர்வத்துக்கு மதிப்பளித்த பெற்றோர் அவரை அத்துறையிலே முன்னேற வழிகாட்டினர். சென்னை மகாராஜா இசைக் கல்லூரியில் அவரைச் சேர்த்து விட்டனர். அங்கே சங்கீதத்தில் டிப்ளோமா வரை கற்று பின்னர் சென்னை சங்கீத அக்கடமியில் இணைந்து வித்துவான் சுப்பிரமணிய ஐயர் அவர்களின் சிஷ்யையாக விளங்கி சங்கீதத்தில் பட்டம் பெற்றார்.
காலாகாலத்தில் கல்யாணமும் நிறைவேறியது. அவரது கைப்பிடித்தவர் ஒரு டாக்டர். பெயர் மோகன்ராவ். இவர்களுக்கு ஒரே மகன் ஜயகிருஷ்ணன். இவருக்கு இசையில் இலயிப்பு இல்லை. இவரது மனைவி சந்தியா இசையறிவு மிக்கவர். சிறந்த பாடகியும் கூட. இசையரசி பீ. சுசீலாவுக்கு இரண்டு பேத்திகள் ஒருவர் ஜயஸ்ரீ மற்வர் சுபஸ்ரீ. இப்படியாக வாழ்க்கை இன்பமாகக் கழிந்து கொண்டிருக்கிறது.
அகவை 75ஐ அடைந்துவிட்ட இசையரசி பீ. சுசீலா நாமறிய, நாடறிய, நானிலமறிய காரணமாக அமைந்தது இசைத்துறை. அதுவும் சினிமா இசைத்துறை. இளமையிலேயே இத்துறையில் கொண்டிருந்த நாட்டம் இவரை இமயத்தை எட்டச் செய்துள்ளது.ஆரம்பத்தில் சென்னை வானொலி பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடிவந்த இவரின் குரல்வளத்தைக் கேட்டு ரசித்த இயக்குநர் கே. எஸ். பிரகாஷ் ராவ் சினிமாவில் பின்னணி பாடுவதற்காக இவரைத் தேர்ந்தெடுத்தார். தந்தை அவ்வளவாக விரும்பவில்லை. என்றாலும் மகளின் ஆர்வம் திறமை என்பன மீது நம்பிக்கை கொண்டு இதற்கு சம்மதித்தார்.
அப்போது பதினாறும் நிறையாதவர் சிறுமி சுசீலா. அது 1951ம் ஆண்டு. அவர் பாடிய முதல் பாடல் பெற்ற தாய் படத்தில் இடம் பெற்ற ஏதுக்கு அழைத்தாய்.. என்ற பாடல். இன்றும் அப்பாடல் ஒலிக்கும் போது இனிக்கிறது. தென்னிந்திய சினிமாவில் இசைத்துறை புது யுகத்தை நோக்கிப் பயணித்த காலம் அது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. சுசீலா என்ற நாமம் நாலா புறங்களிலும் ஒலித்தது. ஒளிர்ந்தது. படங்கள் குவிந்தன. பாடல்கள் நிறைந்தன. ரசனைகள் பெருகின.
கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம் பெற்ற “எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ? உன்னை கண் தேடுதே, மிஸ்ஸியம்மா படத்தில் வரும் பிருந்தாவனமும் நந்த குமாரனும், மங்கையர் திலகம் படத்தில் அறியாப் பருவமா, போன்ற பாடல்கள் இசையின் உச்சிக்கே அவரை அழைத்துச் சென்றன. கவிஞர் கண்ணதாசன் ஏ. மருதகாசி உட்பட அன்றைய கவிஞர்களினதும், கவிஞர் வாலி போன்ற இன்றைய தலைமுறைக் கவிஞர்களினதும் வரிகளுக்கு வாயசைத்த நடிகையர் பட்டாளமொன்றுக்கே உயிர் கொடுத்தது. சுசீலாவின் வளமான இனிய குரலே. கே. வி. மகாதேவன், விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் சுருதி சேர்க்க சுசீலாவின் பாடல்கள் திரையுலகையே ஹிட் ஆக்கின.
தேன்குரல் தேவதை பீ. சுசீலாவின் ஆரம்பகால பாடல்கள் இடைக்கால, அண்மைக்கால பாடல்கள் யாவுமே அமுதானவை. உள்ளத்தில் சதா கேட்டுக் கொண்டிருக்கும் ஆலயமணியின் ஓசை, கேட்கக்கேட்க பசியே வராத பார்த்தால் பசி தீரும் ஆண்டுகள் பல கடந்த போதும் நேற்றுக் கேட்டது போல் இனிக்கும் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், அமுத குரலால் அவர் இசைத்த தமிழுக்கும் அமுதென்று பேர், காற்றில் கலந்து வான வீதியில் பறந்துவரும் காதல் சிறகை, குறைவில்லாத தரமான தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், எத்தனை காலம் சென்றாலும் மறக்க முடியாத
நினைக்கத் தெரிந்த மனமே, கேட்கக் கேட்க தெவிட்டாத சிட்டுக் குருவி முத்தம், மென்மையாக இதயத்தை வருடி வரும் மலரே மலரே, முத்து நிகர் வரிகளால் அமைந்த முத்தான முத்தல்லவோ, கேட்பவரையே கண்ணீர் விடச் செய்யும் மன்னவனே அழலாமா? போன்ற பாடல்கள் எல்லாமே சுசீலாவின் குரல் என்பதா? சுந்தரத்தமிழின் வரம் என்பதா? சந்தனத் தென்றலின் தரம் என்பதா? இசை எனும் நந்தவனத்தின் சுகம் என்பதா? எவருக்குமே விடைகாண முடியாத வினா இது. இசைராணி சுசீலாவின் தாய்மொழி தெலுங்கு. என்றாலும் தமிழ் விற்பன்னர்களிடம் தமிழ் கற்ற இவர் அகர, லகர, நகர பேதங்களின்றி இலக்கணம் வழுவாது இன் குரலால் இசை மழை பொழிவார்.
சுசீலாவினால் தமிழக்கு இனிமை வந்ததா அல்லது தமிழ்தான் இவரிடம் இனிமையை கடன் வாங்குகிறதா என்பது புதிர். சுந்தரப் பாட்டிசைக்கும் சுசீலா குரல் மாறிப் பாடத் தெரியாத குயில். அன்றைய பத்மினி, சாவித்திரி, விஜயா, விஜயகுமாரி ஏன் ஜெயலலிதா கூட ஆகட்டும் எல்லாம் ஒரே குரல். ஆனால் பாடல் காட்சிக்கேற்ப உயணவுகளுக்கேற்ப, இசைக்கேற்ப, ராகதாளங்களுக்கேற்ப சுருதி மாறி இசைப்பதில் இவர் வல்லவர்.
வெண்ணிற ஆடை, கறுப்புப் பணம், சிவந்தமண், நீலவானம், பச்சை விளக்கு, எதுவானாலும் டீ. எம். செளந்தரராஜன், பீ. பீ. ஸ்ரீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜே. ஜேசுதாஸ், எஸ். பீ.
தனது 60 வருட கால இசை வாழ்க்கையில் 40.000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் பெற்றுள்ள விருதுகளும் பாராட்டுகளும் எண்ணிலடங்கா. 2008ம் ஆண்டிலே இந்திய அரசு பத்மபூஷன், விருது வழங்கி அவரைக் கெளரவித்தது. அதற்கு முன் தேசிய அளவில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான திரைப்பட விருதை ஐந்து தடவைகள் பெற்றார். மேலும் மாநில ரீதியிலும், தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பட்டங்களும், விருதுகளும் இவரை நோக்கிப் படை எடுத்தன. தமிழ் நாடு விருது, ஆந்திர, கேரளா ஆகிய விருதுகளைப் பல தடவைகள் வென்றெடுத்தார். வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
தாய் மொழியாக தெலுங்கைக் கொண்டிருந்தாலும் இந்திய மொழிகளான ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் மொழிகளில் மட்டுமன்றி எமது இலங்கைத் திருநாட்டில் மட்டுமே வழக்கிலுள்ள சிங்கள மொழியிலும் கூட டொக்டர், அஹிங்கச பிரயோக, ஆகிய திரைப்படங்களில் தனித்தும் ஏ. எம். ராஜாவோடு இணைந்தும் பாடியுள்ளார்.
தான் எத்தனையாயிரம் பாடல்கள் பாடியிருந்தும் கூட தனக்கு விருப்பமான பாடல் மன்னவன் வந்தானடி, என ஆரம்பிக்கும் பாடல்தான். ஆனால் தனது கணவருக்கு பிடித்தமான பாடல் உன்னைக் காணாத கண்ணும், என்ற பாடல்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
கலைமாமணி பீ. சுசீலாவின் மெல்லிசைகள், துள்ளிசைகள் போலவே பக்தி மணம் கமழும் பாடல்களும் உள்ளங்களில் ரீங்காரமிடத் தவறுவதில்லை. எம்மையெல்லாம் இசை வெள்ளத்திலே ஆழ்த்தி இன்ப மயமாக அசை போடவைத்துவிட்டு இன்று பரவசம் பொங்க வீற்றிருக்கிறார்.
தன் பெயரில் பீ சுசீலா அறக்கட்டளை நிதியம், என்ற அமைப்பை உருவாக்கியுள்ள இவர் தேசிய ரீதியில் இசைத்துறையில் சாதனை புரிபவர்களைப் பாராட்டி கெளரவித்து வருகிறார். இந்த வரிசையில் கடந்த ஆண்டு (2009) கெளரவம் பெற்றவர் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆவார்.

இசைக்குயில் சுசீலா வாழ்க சுகமாக இன்னும் பலப் பல ஆண்டுகள்.6

கருத்துகள் இல்லை: