திங்கள், 17 பிப்ரவரி, 2020

எச்சரிக்கையை மீறி சீனாவிலிருந்து வந்த கப்பல் அனுமதிக்கப்பட்டதா?’ தூத்துக்குடி துறைமுகம்

சீனாவிலிருந்து வந்த சரக்குக்கப்பல்
சரக்கு கப்பலில் சீன ஊழியர்கள்vikatan.com - இ.கார்த்திகேயன் : சீனாவிலிருந்து வந்த சரக்குக்கப்பல்
மத்திய கப்பல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்குள் சீனாவிலிருந்து வந்த சரக்குக் கப்பலை அனுமதித்ததுடன், அக்கப்பலில் வந்த 14 சீனர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு சோதனை நடத்தப்படவில்லை எனவும் புகார் கிளம்பியுள்ளது.
சீனாவில் கொரானா வைரஸ் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சீனாவைத் தாண்டி உலகின் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பில் எந்த அதிகரிப்பும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அனைத்து நாடுகளுக்கும் வைரஸ் பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும், பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


சரக்கு கப்பலில் சீன ஊழியர்கள்
சீனாவிற்குச் சென்று திரும்பும் இந்தியர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா எனச் சில நாள்கள், தீவிர ஆய்வு செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இதற்கெனச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட `ரூயி’ என்ற சரக்குக் கப்பல், மின்சாரக் காற்றாலைகளுக்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஜனவரி 17-ம் தேதி சீனாவிலுள்ள ஷியான் துறைமுகத்திருந்து புறப்பட்டு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றது.



l

அங்கிருந்து 8-ம் தேதி புறப்பட்டு, கடந்த 13-ம் தேதி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தது. இக்கப்பலில், மாலுமி வாங்க் லியாங்மிங், ஊழியர்கள் என மொத்தம் 21 பேர் வந்துள்ளனர். இதில், 17 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள். இதற்கிடையில், மத்திய கப்பல்துறையின் துறைமுகங்களின் இயக்குநர் அரவிந்த் சவுத்ரி, கடந்த 11-ம் தேதி இந்தியாவின் அனைத்துத் துறைமுகங்களுக்கும் எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “சீனாவிற்கு ஜனவரி 15-ம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ எந்தத் துறைமுகத்திலும் அனுமதிக்கவோ, கப்பலை நிறுத்துவதற்கோ, அவர்களை கப்பலிலிருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கக் கூடாது.

சுற்றறிக்கை மற்றும் ஊழியர்களின் பெயர்ப் பட்டியல்
சுற்றறிக்கை மற்றும் ஊழியர்களின் பெயர்ப் பட்டியல்
இந்த உத்தரவு இந்தியாவின் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களும், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கும் பொருந்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை, கடந்த 11-ம் தேதி கிடைக்கப் பெற்ற பிறகும், கடந்த 13-ம் தேதி, 14 சீனர்களுடன் வந்த சரக்குக்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது துறைமுக அதிகாரிகளின் அலட்சியம் எனப் புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து துறைமுக சுகாதார அலுவலரான மருத்துவர் பூர்ணிமாவைத் தொடர்புகொண்டு பேசினோம், “அந்தக் கப்பலில் வந்த மாலுமி உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஊழியர்களில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை” என்றார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சசிராஜிடம் பேசினோம்,“அரசின் விதிமுறையைப் பின்பற்றாமல் எந்தக் கப்பலும் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாது” என்றார்.

ரூயி சரக்குக் கப்பல்
ரூயி சரக்குக் கப்பல்
ஆனால், “துறைமுகங்களின் இயக்குநரின் எச்சரிக்கை சுற்றறிக்கைக்குப் பிறகு துறைமுகத்திற்குள் இச்சரக்குக்கப்பல் அனுமதிக்கப்பட்டது ஏன்?” என்ற நம் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. துறைமுகம் சார்ந்த செய்திகள், தகவல்கள், சாதனைகள் குறித்து மீடியாக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புகார் குறித்து துறைமுக நிர்வாகம் அதிகாரபூர்வமான அறிக்கை வெளியிடாமல் மெளனம் காப்பதுதான் சந்தேகத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் உதிரிபாகங்கள் இறக்கப்பட்ட நிலையில், அந்தக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தை விட்டு வெளியேறியது.
vikatan.com

கருத்துகள் இல்லை: