வியாழன், 20 பிப்ரவரி, 2020

பாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது!மின்னம்பலம் : பாகிஸ்தான் உளவுத் துறை செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு வைத்து தகவல்களைப் பரிமாறியதாக 13 இந்தியக் கடற்படை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ராணுவ ரகசியங்களைக் கசியவிடும் உளவாளிகளைத் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து வருகின்றனர். அண்மையில் கடற்படை அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானுக்குத் தேசியப் பாதுகாப்பு ரகசியங்களைக் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர போலீசாருடன் இணைந்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடற்படை அதிகாரிகள் இணைந்து பாகிஸ்தானுக்குத் தகவல்களை பரிமாற்றம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கடந்த ஆண்டு இறுதியில் 7 இந்தியக் கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பும், ஆந்திர காவல்துறையும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களைக் கைது செய்யத் தீவிரம் காட்டியது. இதற்கு உளவுத் துறையும் ஒத்துழைப்பு அளித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி மேலும் 11 இந்தியக் கடற்படை அதிகாரிகள் உட்பட 13 பேரைத் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இவர்கள் மும்பை, கார்வார் (கர்நாடகா) மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கடற்படை தளங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் இந்தியக் கடற்படை தொடர்பான முக்கிய தகவல்களை தங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலம் பாகிஸ்தானுக்குக் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேகிக்கப்படும் சமூக வலைதள பக்கங்களை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, இந்திய கடற்படை தனது பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தவும் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
2ஜி இணைப்புடன் பழைய தொழில்நுட்ப செல்போன்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: