புதன், 19 பிப்ரவரி, 2020

மக்கள் பயன்படுத்திய பணத்தை அழிக்கும் சீன அரசு.. கொரோனாவைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!

யுவான் - சீனப் பணம்vikatan.com - சத்யா கோபாலன் : கொரோனாவைக் கட்டுப்படுத்த சீன மக்கள் பயன்படுத்தும் யுகான் பண நோட்டுகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து மக்களின் உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் சீன மக்களைப் பெரும் பாடுபடுத்திவருகிறது. சீனா மட்டுமல்லாது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 70,000 -த்தை தாண்டி விட்டது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 1,700 பேருக்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது. போக்குவரத்துக்குத் தடை, வெளியில் நடமாடக் கட்டுப்பாடுகள், ஒரே வாரத்தில் மிகப் பெரும் மருத்துவமனை, பல்வேறு மருத்துவ வசதிகள் எனத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரோபோக்களின் உதவியுடன் உணவு போன்ற தேவையான அனைத்துப் பொருள்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. > அதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் போன்ற அனைவரும் தங்களின் குடும்பங்களைப் பிரிந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக இரவு பகலாக வேலை செய்துவருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்ததன் மூலம் மட்டுமே இதுவரை 50-க்கும் அதிகமான மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் போன்றோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வீடு வீடாகச் சென்று சோதனை செய்து வருகின்றனர்.


சீனா


சீனா
AP
உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல், எச்சில் போன்றவற்றின் மூலமாகப் பரவுவதால் அதைக் கட்டுப்படுத்துவது சீன அரசுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. அதனால்தான் அங்குள்ள மருத்துவர்கள் தங்கள் உடலை முழுவதுமாக மறைத்துக்கொண்டு சிகிச்சை வழங்குகின்றனர். மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள மருத்துவமனையின் கதவு கைப்பிடிகள், படிக்கட்டுகளின் கைப்பிடிகள், லிஃப்ட் பட்டன்கள் போன்ற மக்கள் கை வைத்து பயன்படுத்தும் அனைத்து இடங்களும் தொடர்ந்து கிருமி நாசினிகொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.






தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் பணத்தின் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் சீன மக்கள் பயன்படுத்தும் யுவான் (yuan) நோட்டுகளைத் தூய்மைப்படுத்தவும் அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புற ஊதா கிருமி நீக்கம், அதிக வெப்பநிலை போன்ற வழிகளில் நோட்டுகளைத் தூய்மைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான வுகான் நகர மக்களால் பயன்படுத்தப்பட்ட பணத்தை அழிக்கவும் முடிவெடுத்துள்ளனர்.


சீன மக்கள்


சீன மக்கள்
AP
இதற்காகப் புதிதாக அச்சடிக்கப்பட்ட கிருமி தாக்காத 4 பில்லியன் வுகான் நோட்டுகளை வெளியிடவுள்ளது சீன மத்திய வங்கி. பண நோட்டுகளால் வைரஸ் பரவுகிறது என்று அதிகாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இதைச் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று சீனா மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் டிக்கெட்டுகளும் தினம் தினம் தூய்மை செய்யப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை: