சனி, 22 பிப்ரவரி, 2020

பெண் கிளார்க்குகளை நிர்வாணப்படுத்தி சோதனை!


மின்னம்பலம் : குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில், அண்மையில் 68 மாணவிகளிடம் அவர்களது ஆடையைக் கழற்ற சொல்லி மாதவிடாய் சோதனை செய்தது பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து ஸ்ரீ சாஹ்ஜானாந்து பெண்கள் கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த சர்ச்சை ஓய்வதற்குள் குஜராத்தில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெண்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரத் பகுதியில் முனிசிபல் கார்பரேஷனில் பணிபுரியும் பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து, அந்தப்பெண்களுக்குக் கருத்தரிப்புச் சோதனை நடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் அளித்த புகாரில், திருமணமாகாத பெண்களையும் மற்றவர்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? இல்லையா? என்று சோதனை நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதாவது, சூரத் நகராட்சி மருத்துவமனையில், பெண்கள் வார்டில் மருத்துவ பரிசோதனைக்காகப் பயிற்சி பெண் கிளார்க்குகள் 10 பேர் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் சூரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த சூரத் ஆணையர் பன்ச்சாநிதிபானி உத்தரவிட்டுள்ளார். அதன்படி உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சிக் காலம் முடிந்தவுடன் பயிற்சி கிளார்க்குகள் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம் தான் என்றாலும், இதுபோன்று கருத்தரிப்பு சோதனை நடத்தியது மிகுந்த சங்கடத்தையும் வேதனையையும் அளித்ததாகப் பயிற்சி கிளார்க்குகள் கூறுகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்கள் அமைப்பினர் கூறி வருகின்றனர்.
அதேசமயத்தில் விசாரணையில் இந்த குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் இத்தகைய சோதனை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூரத் மேயர் ஜக்தீஷ் படேல் தெரிவித்துள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: