வியாழன், 20 பிப்ரவரி, 2020

இலங்கை .. பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறும் வாய்ப்பில்லை?

Jeevan Prasad : எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும்
பெரும்பான்மையான ஆசனங்களை பெறும் வாய்ப்பில்லை.
நுனிப் புல் மேய்கிறேன் ........ - ஜீவன்
ரணில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் அவர் முன்னைய ஆட்சியினர் வாங்கிய கடனை அடைப்பதில் கவனம் செலுத்துவாரே தவிர , தனது கட்சிக்காரர்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்தவரல்ல. ஒரு சிலருக்கு வேலைகளைக் கூட கொடுத்ததில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். அது காலம் காலமாக நடக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. அவரது சிந்தனைகள் நல்லவையாக இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்தும் திறனோ அல்லது முதுகு பலமோ அவரிடம் இல்லை. இதுவே அவரால் தொடர்ந்து ஆட்சியை தொடர முடியாமல் போனதற்கான காரணம். ரணில் வெள்ளைக்காரன் போல ஆங்கிலத்தில் சிந்திப்பவர். அது இலங்கையில் வாழும் சிங்களவர்களாலேயே ஏற்க முடியாதது. ஆகக் குறைந்தது முன்னைய ஆட்சியாளர்கள் நியமித்த அதிகாரிகளைக் கூட மாற்றி தமக்கு ஆதரவான அதிகாரிகளை நியமித்து தமது கட்சியினருக்கு வேலை வாய்ப்பையாவது கொடுக்க திராணியற்றவர். கேம் மூலம் காய் நகர்த்துவதில் வல்லவர். ஆனால் கேம் எப்போதும் வெற்றியளிப்பதில்லை. காலத்தை இழுத்தடிப்பவர். இதனால் அடிமட்ட தொண்டர்கள் விரக்தியாக உள்ளனர். பரம்பரை ஐதேகவினர் கூட உட் கட்சி மோதலால் உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். ரணிலின் நடத்தையால் ஒரு காலத்தில் ஒரு போஸ்ட்டர் அடிக்கக் கூட ஆள் இல்லாத நிலை இருந்தது. ரணில், சஜித்தை அழிப்பதாக நினைத்து ஐதேகவை அழித்துக் கொண்டிருக்கிறார். அதை அநேகர் உணருகிறார்கள். மைத்ரி சுதந்திரக் கட்சியை இல்லாமல் செய்தது போல , ரணில், ஐதேகவை இல்லாமல் செய்துவிட்டே வீடு செல்வார் என சொல்கிறார்கள் !

தற்போதைய அரசின் விலைவாசி உயர்வுகள் வானைத் தொட்டுக் கொண்டிருக்கும் போது , அது குறித்து எந்த போராட்டமும் செய்யாத ஐதேக ,ஒரு சின்னத்துக்காக சிண்டு பிடித்து அடிபட்டுக் கொண்டிருக்கிறது. கேவலம். இனி எப்படி இவர்களை வாக்காளர்கள் நம்புவார்கள்?
மகிந்த எதிரணியில் இருக்கும் போது விலைவாசிகளை மேடையில் பொம்பாய் வெங்காய விலை எப்படி? அரசி விலை எப்படி? எனப் பேசி ' சப்பத ' நல்லாயிருக்கா என நக்கலடித்தார்.
அவர் ஆட்சியை பிடித்த பின் அவரால் பிடித்துக் கூட நிறுத்த முடியாத அளவு விலைவாசி உயர்வு விண்ணை தொடும் தூரம் சென்று விட்டது. அவரை திருப்பி ஆட்கள் கேட்கிறார்கள். அவர் மூடிக் கொண்டு திரிகிறார். கடன்களை அடைக்க முடியாமல் அரசு தடுமாறுகிறது. எவரும் நாட்டுக்குள் முதலீடு செய்ய வர விரும்பவில்லை. நாட்டை விற்கிறார்கள் என ஐதேகவை குற்றம் சாட்டியவர்கள் , வந்ததும் வராததுமாக நாட்டின் இரு பகுதிகளை வெளிநாடுகளுக்கு விற்று விட்டார்கள். கடன்களை அடைக்க வேறு வழி? சீனாவோ அல்லது இந்தியாவோ மேலும் கடன் தரும் நிலையில் இல்லை.
தமிழர்களுக்கும் - முஸ்லீம்களுக்கும் விலைவாசி என்பது பெரிய பிரச்சனையே இல்லை. அதற்கு காரணம் இந்த இரண்டு இனமும் படாத துன்பம் இல்லை. அதனால் அவர்கள் விலைவாசியை விட அமைதியாக வாழக் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் சிந்திப்பவர்கள். சிங்களவர்கள் அப்படியில்லை. பாண் விலை 5 சதத்தால் கூடினாலும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒப்பாரி வைப்பார்கள். அதற்கு மேல் நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களது வாழ்வு முறை அப்படியானது. அதனால் மகிந்த - கோட்டா தலைமையில் நடத்தும் ஆட்சியில் 62 லட்சம் கோட்டாவுக்கு கொடுத்தவர்களே விலை வாசி உயர்வால் குப்பற படுத்து குளறுகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவுக்கு அரச சேவகர்களது அதிகமான வாக்குகள் விழுந்தன. ஆனால் கோட்டாவின் சட்டங்கள் அரச சேவகர்களுக்கு மூக்கணாங் கயிறு போட்டுள்ளது. நினைத்த நேரத்தில் சுற்றித் திரிய முடியாது. ஓவர் டைம் கிடையாது. சம்பள உயர் இல்லை. சரியாக பணி செய்யாது போனால் வேறு ஆட்களை கோட்டா நியமிக்க ரெடி. அரச அதிகாரிகளுக்கு மனதில் வேதனை. ஆனால் பாமர மக்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது. காரியாலயங்கள் ஓரளவாவது சரியாக இயங்குகின்றன. எனவே கோட்டாவுக்கு 5 வருடமும் பிரச்சனையில்லை. அவரை அசைக்க முடியாது. 5 வருட ஜனாதிபதி காலத்தில் அவரால் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். கிடுக்கி பிடிதான். இருந்தாலும் சரியான பிடி. (அவர் குறித்து பின்னர் பேசலாம்) நினைத்ததை சாதிக்க பலமான தலைவர். யாரும் வாய் திறக்க மாட்டார்கள். நம்மவர்களுக்கு அதுதான் சரி!
மகிந்தவும் என்ன செய்தாலும் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். அவரும் நினைத்தை நடத்துபவர். தனது ஆதரவாளன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காதவர். கைவிடாதவர். இந்த குணம் ரணிலிடம் இல்லை. எனவே மகிந்த ஆதரவாளர்கள் அவரை விட்டு அகல்வதில்லை. ஆனால் இப்போதைய விலைவாசி உயர்வு போன்றவை சாதாரண மக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது. ஆதரவு இருந்தாலும் பொது மக்கள் வாக்குகள் குறைய வாய்ப்புள்ளது. அதை எல்லோரும் உணர்கிறார்கள். சந்தோசமா என கேட்டவர்கள் சந்தடியில்லாமல் பொருட்களை வாங்குகிறார்கள். 62 லட்சமும் ???
மைத்ரியை பற்றி சொல்லவே வேண்டாம். ஜனாதிபதி பதவி முடிந்ததும் மண் வெட்டியோடு பொலன்னறுவைக்கு விவசாயம் செய்யப் போவதாகச் சொல்லி வந்தார். ஆனால் 2 வருடத்தில் வீட்டுக்கு போவேன் என்றவர் இன்னும் 5 வருடம் இருக்க முடியுமா என முயன்று, கடைசியில் 8 கோடி பெறுமதியான வீட்டை பெற்று கொழும்பில் தங்கிவிட்டார்.
அவரது குடும்பம் அவரது காலத்தில் நன்றாக உழைத்தது. மக்களுக்கு அவரது பேச்சு மட்டுமே கேட்டது. வாய் பேச்சு வீரர். அடுத்தவர் செய்ததையெல்லாம் தான் செய்தது என மார் தட்டிக் கொண்டார். சென்ற அரசு காலத்து நல்ல பல விடயங்களை தடுத்ததில் முக்கிய பங்குதாரர். ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் இவரையே அனைவரும் குற்றவாளியாக்குகிறார்கள். தூள்காரர்களை தூக்கிலிடுவேன் என தொடர்ந்து சொல்லி வந்தவர் கடைசியில் தூக்குக்கு நியமிக்கப்பட்ட ஒருவரை பணம் வாங்கி விடுவித்துவிட்டே வீடு சென்றார். ஹரிச்சந்தரனின் பக்கத்து வீட்டுக்காரர். எனவே பிரச்சனைகளிலிருந்து தப்ப மகிந்தவோடு முண்டு கொடுத்துள்ளார். மக்கள் தன்னை தொடர்ந்து அரசியலில் நிற்கச் சொல்வதாக வாய் கூசாது உண்மை சொல்கிறார். யாரும் மைத்ரி ஒரு ஜனாதிபதியாக இருந்தார் என்பதையே மறந்து விட்டார்கள். அப்படி மக்களால் வெறுக்கப்பட்ட ஒருவரானார். எனவே அவரது கட்சியும் பெரிதாக தேற வாய்ப்பில்லை.
ஜேவீபீ ஒரே குற்றப் பத்திரிகை வாசிக்கும் கட்சி. நல்லதையும் எதிர்க்கும். கெட்டதையும் எதிர்க்கும். அதனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்த வாக்கு வங்கி 6 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை குறைந்து போனது. இடது சாரிக் கட்சியாக இருந்தாலும் இதுவும் சிங்கள இனவாத கட்சியாகவே பலரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ் இனவாத பிரச்சனை தீர தடையாக இருந்தது தாங்கள் என மார் தட்டிக் கொண்டார்கள். இரண்டு முகங்கள்.
ரணில் - சஜித் - மகிந்த - மைத்ரி ஆகியோரை வெறுப்போர் ஜேவீபீக்கு ஆதரவளிக்கும் நிலை ஒன்று இருந்தது. தவிர மிதக்கும் வாக்குகள். ஆனால் அது இன்றைய மக்கள் மனதில் இல்லை. எனவே இப்போது பாராளுமன்றத்தில் ஜேவீபியில் இருப்போர் கூட அடுத்த பாராளுமன்றத்துக்கு தேர்வாவார்களா என்பது கேள்விக் குறியே?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேலையும் மக்களுக்காக செய்யாது ஜெனீவா - புதிய அரசியலமைப்பு என காலத்தை கடத்தியதே தவிர ஒன்றையும் செய்தவர்களில்லை. எப்போதும் போல தொடர்ந்தும் எதிர்ப்பரசியல் வேலைக்கு ஆகாது. செத்துப் போன பிணத்தை வைத்து அழுது கொண்டு, உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற வேண்டுமெனும் அக்கறை இல்லாத மோட்டு சித்தாந்தம். இது மக்களை வெறுப்படைய வைத்துள்ளது. மக்கள் முன்போல் இல்லை. ரணில் - மைத்திரி அரசில் இருக்கும் போது எத்தனையோ விடயங்களை மக்களுக்காக செய்திருக்கலாம். ஏக்கீய என்ற ஒரு வசனத்தோடு காலத்தை கடத்திய காலம் தேவையே இல்லாத ஆணி. கடைசியில் அரசியல் யாப்பும் இல்லை. மக்களுக்கு விமோசனமுமில்லை. அதைக் கூட விளங்கிக் கொள்ளாதோருக்கு என்ன அரசியல்? மக்களுக்கு வந்த பல நல்ல விடயங்களைக் கூட தடுத்ததை தவிர வேறேதையும் செய்தவர்களில்லை. மாகாணசபை இன்னொரு சாபக் கேடு. ஒரு வீட்டைக் கூட கொடுக்க விடாது தடுத்த அரசியல். அவர்களது வீட்டு சின்னத்துக்கு இனியும் மக்கள் வாக்களிப்பார்களா?
ஏனைவை சிறு சிறு கட்சிகள். அவர்கள் செய்த பணிகள் நிமித்தம் அவர்கள் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.
எனவே யாருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் பெரியதொரு வெற்றி வாகை கிடைத்தால் புதுமைதான். அப்படி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நுனிப் புல் மேய்ந்தால் தெரிகிறது

கருத்துகள் இல்லை: