சனி, 22 பிப்ரவரி, 2020

இஸ்லாமியர்களின் எண்ணிக்கை.. நண்பர்களே,அது தவறான தகவல்

சாவித்திரி கண்ணன் : சார், தவறான தகவல்!’’ ’’தோழரே, இதை மீண்டும் சரிபாருங்கள்…’’என்பதாக உரிமையுடன் பலர் பேசினர் சென்ற பதிவு தொடர்பாக! இவை, இஸ்லாமியர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கை தொடர்பாக நான் கூறியிருந்தது பற்றி!
நண்பர்களே,அது தவறான தகவல் என்றால்,அதை திருத்திக் கொள்வதற்கு எனக்கு ஒரு சிறிதும் தயக்கமில்லை! உண்மை தான் முக்கியமே தவிர, இதில் பிடிவாதம் தேவையற்றது.
நான் விசாரித்த வகையில், என் இஸ்லாமிய நண்பர்களே சொன்னார்கள்! ’’படிப்பறிவின்மை,அறியாமை காரணமாகவும், உலாமாக்களின் முட்டாள்தனமான பிரச்சாரம் காரணமாகவும் இஸ்லாமியர்களில் பாதிபேர் அதிக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளது உண்மை தான்! அது மட்டுமல்ல, வங்க தேசத்திலிருந்து அதீத அளவில் இஸ்லாமிய அகதிகள் வந்ததும் ஒரு காரணம்’’ என்றனர்.
ஆனால், எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இது நடந்துவிட்டதாக நான் குற்றம் சொல்ல மாட்டேன். இந்துக்களிலேயே கூட, இப்படி அதிக குழந்தைகள் பெறுகின்ற போக்குகள் சமீபகாலத்தில் தான் முடிவுக்கு வந்தது.
ஏனெனில், நானே என் பெற்றொருக்கு எட்டாவது குழந்தை தான்!

என் சிற்றப்பாவுக்கோ 14 குழந்தைகள்! இவை, 50 ஆண்டுகளுக்கு முந்திய நிலைமை! ஆகவே,இஸ்லாமியர்களில் கணிசமானவர்கள் இன்று,அளவான குடும்பத்திற்கு மாறி வருகிறார்கள் என்பது கண்கூடான உண்மை!
ஆகவே,கடந்த காலத்தில், காலச்சூழல் மற்றும் சந்தர்பவசத்தின் காரணமாக அதிகரித்துள்ள இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறித்த குற்றஉணர்வு தேவையற்றது! ’’ஆமாம்,அதிலென்ன வந்தது இப்போது?’’ என்று கேட்போம்!
இந்த நாட்டில் மதச்சார்பற்ற,மனித நேயமிக்க இந்துக்களின் எண்ணிக்கையே மிக அதிகம்! நாங்கள் இஸ்லாமியர்களை ஒரு போதும் கைவிடமாட்டோம்! இதை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன்.எந்த சபையிலும் சொல்வேன்!
நான் என் பதிவில் சொல்லவந்த விஷயத்தை முழுமை செய்யவில்லை! ஆகவே, பொறுமையாக தொடர்ந்து படியுங்கள். சாத்வீக பாதையில், காந்திய வழியில் உறுதியாக உள்ள சாவித்திரி கண்ணன் குறித்த சந்தேகம் தேவையற்றது!
எனது முப்பது ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகையாளர் அனுபவத்தில் இன்றைய தினம் நான் பார்ப்பது போன்ற ஒரு அச்சமான,இறுக்கமான சூழலை நான் வேறெப்போதும் கண்டதில்லை! அந்த அளவுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் நடவடிக்கையால் ஒரு நம்பிக்கையற்ற மன நிலையை மக்களிடம் ஏற்படுத்திவிட்டனர்.
ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமும், கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரையும் உயர்ந்த பதவி வகிப்பவர் தொடங்கி, பாமரர் வரையும் பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அச்சத்தோடு பார்த்தவண்ணம் உள்ளனர்! தங்களது வெளீப்படையான நடவடிக்கைகளாலும் வெறுப்பான பிரச்சாரங்களாலும் இதை சாத்தியப்படுத்திவிட்டனர் சங்பரிவாரத்தினர்.
தன் கூட வாழும் சக மனிதர்கள் அச்சத்தில் உழல்வதை, தனிமைப்பட்டு போவதை பெருமளவிலான இந்துக்கள் தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள்!
இது காந்திய தேசம்! அன்பின் பெருவூற்று இதயத்தின் அடியாளத்தில் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாரம்பரியத்தில் வந்தவர்களே நாம்! நேற்று வரை இந்துக்களாக இருந்தவர்கள் தான் சந்தர்ப்பவசத்தால் இஸ்லாமியர்களாகியுள்ளனர்! இந்த மண்ணுக்கேயான மாண்புகள் இஸ்லாமியர்களிடம் பூரணமாக உண்டு!
’’குடியுரிமைச் சட்டம் இங்கிருக்கும் யாரையும் ஒரு சிறிதும் பாதிக்கப் போவதில்லை. ஆகவே,இதில் அச்சப்படுவதற்கு தேவையில்லை’’ என்பது ஒரளவு உண்மை தான்! ஆனால்,அரைகுறை உண்மை ஆபத்தானது.
'
குடியுரிமை சட்டம் பாதிக்காது' என்றாலும், இதைதொடர்ந்த NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, NRC எனப்படும் குடிமகன் என்பதற்கான தேசிய அடையாள அட்டை என்பதை கொண்டு தாங்கள் நாடற்றவர்களாக்கப்படுவார்கள் என்ற இஸ்லாமியர்களின் அச்சத்தை புறம் தள்ளமுடியாது.
’’அப்படியெல்லாம் அச்சப்படுவது அறியாமை என்றும்,அரசியல் கட்சிகள் இப்படி இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகின்றனர் என்றும் இவை, ஒரு அரசாங்கத்திற்கு அடிப்படையான,அவசியமான கடமை என்றும்,இதை மறிதலிக்கவே முடியாது’’ என்றும் பலர் வாதாடுகிறார்கள்!
ஆனால்,இந்த அச்சத்திற்கு காரணம், பாஜக தலைவர்களிடம் கடந்த காலத்தில் இஸ்லாமியர்கள் பெற்ற கசப்பான அனுபவங்கள் தான்!
''பாபர் மசூதியை இடிக்க மாட்டோம்,அதை அனுமதிக்கவும் மாட்டோம்'' என நீதிமன்றத்திலேயே வாக்குறுதி தந்து( உ.பி முதல்வர் கல்யாண்சிங்) மீறியவர்கள் அல்லவா?
பாபர் மசூதியை இடித்து தகர்க்க ரதயாத்திரை நடத்தி,வெறுப்பு பேச்சுகளை அரங்கேற்றி, தூண்டிவிட்டு,திட்டமிட்டு களத்தில் ஆட்களையும், இறக்கி,அதை மேடை போட்டு ஏறி நின்று ரசித்து,வேடிக்கையும் பார்த்துவிட்டு, அத்வானி வகையறாக்கள் நீதிமன்றத்தில், ’’ஐயோ..எங்களுக்கு தெரியாமல்,எதிர்பாராமல் அது நிகழ்ந்தது…’’ என்றார்களே…, அதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதே! அப்படிப் பேசியவர் துணைப்பிரதமர் ஆக முடிந்ததே!
ஆகவே, இவர்கள் அடிப்படையில் அந்தரங்க சுத்தி இல்லாமல் இருப்பதுவே இஸ்லாமியர்கள் திரண்டு எழுந்து, தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து,ஒன்றுபட்டு களத்தில் இறங்கிப் போராடக் காரணமாகும்!
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் இயல்பாக நடந்து வந்தது தான் NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு.ஆனால், தற்போது வரலாற்றிலேயே இல்லாத வகையில் இன்று பல மாநிலங்கள் ’’இந்த பதிவை நடத்த அனுமதிக்கமட்டோம்’’ எனக் கூறியுள்ளன என்பது சாதரண விசயமல்ல!
காரணம், இந்த கணக்கெடுப்பில் கேட்கப்படும் பெயர்,மதம்,தந்தை,தாய் பிறந்த இடம்,தாய்மொழி,திருமணம் உள்ளிட்ட 29 விதமான கேள்விகளைக் கொண்டே என்.ஆர்.சிக்கும் பாதை போட்டுக் கொள்வார்கள் இந்த ஆட்சியாளர்கள்!
இதன் விளைவு, ’லட்சக்கணக்கான இஸ்லாமியர்களை நாடற்றவர்கள் ஆக்கும்! சொத்து சுகங்களை பறிக்கும்,ஒட்டு போடும் உரிமையற்றவர்களாக்கும்…’ என்ற அச்சத்தை நாம் ஒரு போதும் அலட்சியப்படுத்தமுடியாது.
பாஜகவின் இரட்டை நாக்கு பேச்சுகள், மனதின் அடியாளத்தில் இஸ்லாமியர்களை வெறுக்கும் இயல்பு, காஷ்மீர் மக்களை சுதந்திரமற்றவர்களாக்கிய அவலம், பசு பாதுகாப்பு என்ற பெயரிலான கொலைவெறி தாக்குதல்கள்….என எண்ணற்ற அனுபவங்கள் இந்த நாட்டு மக்களை நிம்மதியற்ற நிலைக்கு தள்ளியுள்ளது!
ஆக, இன்றைய தினம் இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று பாஜகவிடமிருந்து விலகி நிற்பதோடு இஸ்லாமிய சகோதரர்களுக்கு அரணாக நிற்க வேண்டுவது காலத்தின் கட்டாயமாகும்!

கருத்துகள் இல்லை: