வியாழன், 20 பிப்ரவரி, 2020

திருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் உயிரிழப்பு

திருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் பலி!மின்னம்பலம் : திருப்பூரில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று பெங்களூருவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி நேற்று இரவு 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. அதுபோன்று கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்றும் சென்றுள்ளது.
இன்று அதிகாலை 3.15 மணி அளவில் அவிநாசி அருகே சென்று கொண்டிருக்கும்போது வேகமாக சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கேரள பேருந்து மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக சேதமடைந்தது. குறிப்பாகப் பேருந்தின் வலது புறம் முழுவதும் சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பெண்கள் என 20 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். 22 பேர் படுகாயமடைந்து கோவை மற்றும் அவிநாசி பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருச்சூர், பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.
தற்போது 20 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று இறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை என திருப்பூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து கேரள தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுபோன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நரி பள்ளம் பகுதியில் சுற்றுலா பேருந்தும் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: