வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஸ்டாலின் :நீட் விலக்கு மசோதா ,,, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற என்ன செய்தீர்கள்?-

tamilthehindu :சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்க முதல்வரும், அதிமுக எம்.பி.க்களும் என்ன செய்தீர்கள் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்புகளை முற்றிலும் கெடுத்து, கிராமங்களில் இருந்து, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் இருந்து மருத்துவர்கள் யாரும் உருவாகி விடக்கூடாது என்ற ஒரே உள்நோக்கத்துடனும், சதி எண்ணத்துடனும், மத்திய பாஜக அரசால் இன்றைக்கு நீட் தேர்வு திணிக்கப்பட்டு, தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் சட்டமன்றத்தில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டாலும் இன்றுவரை அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துக்கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை அமைத்து, மாநில உரிமைகளை அடியோடு பறித்துக்கொள்ள வியூகம் வகுத்து, மத்தியில் உள்ள பாஜக அரசு திட்டமிட்டு  செயல்படுகிறது.
கருணாநிதி ஆட்சிகாலத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு, அந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்ட பிறகு, இப்போது நீட் தேர்வுக்கென தனிச்சட்டம் கொண்டு வந்து, ஏற்கெனவே குடியரசுத் தலைவர் கொடுத்த ஒப்புதலை, சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக அர்த்தமற்றதாக்கி, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை ஒரு கானல் நீராக்கி விட்டது மிகுந்த கவலைக்குரியது.
நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கேள்வித்தாள் வெளியிட்டு, தமிழக மாணவர்களை அதிலும் பாதிப்படைய வைத்துவிட்ட மத்திய பாஜக அரசு உச்ச நீதிமன்றத்திலேயே அதற்காக குட்டு வாங்கியது. இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே கேள்வித்தாள் என்று அறிவித்துள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ''நீட் தேர்வில் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்'' என்று அறிவித்திருந்தார்.
ஆனால், அந்த அறிவிப்பை மூன்றே நாட்களில் மறுத்து விட்டது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். இப்படி, நீட் கேள்வித்தாளில் கூட மாநில பாடத் திட்டங்களில் இருந்து கேள்வி கேட்க முடியாது என்று பிடிவாதமாக மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்படுவது, மாநிலங்களைச் சிறுமைப்படுத்தி, கல்வியை முற்றிலும் மத்திய அரசின் அதிகார வளையத்திற்குள் கொண்டு வந்துவிடும் பேராசை நிறைந்த அராஜகப் போக்கு.
அதிமுக அரசோ, நீட் தேர்விலிருந்து முற்றிலும் விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா பற்றி மத்திய பாஜக அரசிடம் எந்தவொரு கேள்வியும் எழுப்பத் தயாராக இல்லை. நீட் தேர்வு நடைபெறப் போகின்ற நிலையில் கூட, அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற முதல்வரோ, அதிமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோ துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. மாறாக பிப்ரவரி மாதம் பிறக்கப்போகும் இந்தநேரத்தில் கூட, மாநில அரசு அமைக்கப் போவதாக சொன்ன நீட் பயிற்சி நிறுவனங்களையும் ஆரம்பிக்கவில்லை.
ஆரம்பிக்கப்பட்ட சில நீட் பயிற்சி நிறுவனங்களிலும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்துடன் பயிற்சி இல்லை என்று பெற்றோர்கள் வேதனைப்படும் சூழ்நிலையை உருவாக்கி, மாணவர்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.
எதிர்கால தலைமுறையினரின் மருத்துவக்கல்வி விஷயத்தில், மத்திய - மாநில அரசுகள் நடத்தும் இதுபோன்ற கபட நாடகம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு, மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறவிருப்பதால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அந்த ஒப்புதல் பெறுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இனியும் காலதாமதம் செய்யாமல் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரைச் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கருணாநிதி நிறைவேற்றிய நுழைவுத்தேர்வு ஒழிப்புச் சட்டத்தின் தனிச்சிறப்பான தன்மையினை முறையாக முன்னெடுத்துச் சென்று நிலைநாட்டி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியைக் காப்பாற்ற அதிமுக அரசு தவறிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.''
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: