ஞாயிறு, 28 ஜனவரி, 2018

சந்திரபாபு நாயுடு பாஜகவை கழற்றி விடுகிறார் ... தோல்வி பயம் !

தெலுங்கு தேசம் – பாஜக விரிசல்?மின்னம்பலம் :ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் அம்மாநில பாஜகவினர். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக – தெலுங்குதேசம் இடையே விரிசல் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது என்று கூறியுள்ளார் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி இடம்பெற்றது. இந்த கூட்டணி, ஆந்திரா சட்டமன்றத் தேர்தலிலும் பெருவெற்றியைப் பெற்றது. இதனையடுத்து, தெலுங்குதேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது. மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஆட்சி நீடித்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஆந்திர பாஜக தலைவர்கள் தெலுங்கு தேசத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ”பாஜகவினர் எங்களைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். கூட்டணியில் தொடர்கிறோம் என்பதால் அமைதி காக்கிறோம். பாஜகவை விமர்சிக்காமல் இருக்க, தெலுங்கு தேசம் கட்சியினரிடையே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்போது, கூட்டணி வேண்டாமா? வேண்டுமா என பாஜக தான் முடிவெடுக்க வேண்டும். எந்த முடிவென்றாலும், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே விரிசல் உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் இதுபோன்ற பேச்சுகளுக்குப் பின்பு, சமீபத்தில் பாஜகவுடன் உறவு இல்லை என அறிவித்தது சிவசேனா கட்சி. இப்போது, அதேபோன்ற நிலைமை ஆந்திராவிலும் உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: